கோபி: கோபி அருகே தண்ணீர்பந்தல்புதுாரில் இயங்கிய காகித ஆலை குறித்து, இரு எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில், பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
கோபி அருகே தண்ணீர்பந்தல்
புதுாரில் இயங்கிய, தனியார் காகித ஆலை நிர்வாகம், கழிவு நீரை வெளியேற்றியதால், பாசன கிணறுகள் முதல், விளை நிலங்கள் வரை மாசடைவதாக, அப்பகுதியினர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் தெரிவித்தனர். அதனால், அத்துறையினர் ஆய்வு செய்து, ஆலையின் மின் இணைப்பை சில மாதங்களுக்கு முன்பு துண்டித்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மின் இணைப்பு வழங்குவதாக கூறி வந்த அதிகாரிகளுக்கு, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில், அப்பகுதியினரிடம் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பேசுகையில், ''மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கண்ட பின் இயக்கலாம் என, ஆலை நிர்வாகத்தினர் நினைக்கவில்லை. ஒரு ஆலையை இயக்க, ஒரு ஊரையே அழிக்கலாமா. மார்ச், 24ல் நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையின் அறிக்கை, முதல்வரின்
கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஆலை பிரச்னை குறித்து, தற்போது இருக்கும் உண்மை நிலவரத்தை, அமைதி பேச்சுவார்த்தையில், வருவாய்த்துறையினர் பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
காகித ஆலையின் கழிவுநீரால், நிலத்தடி நீர் பாதித்து, தொழு நோய், புற்றுநோயால் மக்கள் பாதித்துள்ளனர். மக்கள் பிரச்னையை ஆலை நிர்வாகம் புரிந்துகொள்வதாக இல்லை. சுற்றுச்சூழல் துறை அமைச்சரை, ஓரிரு நாளில் சந்திக்க உள்ளோம். அதன் மூலம் இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.