ஈரோடு: ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பொது மேலாளர் தேவி கூறியதாவது:
வழக்கமான அளவை விட நேற்று காலை ஆவினுக்கு, 1,250 லிட்டர் பாலை கூடுதலாக விவசாயிகள் வழங்கி உள்ளனர். இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கும். தனியார் பால் நிறுவனங்கள் ஆதிக்கம் உள்ள ஒரு சில இடங்களில் மட்டும் தான் கடந்த, 2,3 மாதங்களாக விவசாயிகள், ஆவினுக்கு மிக குறைந்த அளவு பாலை வழங்கி வருகின்றனர்.
தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டி கொள்ள, தனியார் பால் நிறுவனங்கள் வேண்டுமென்றே விவசாயிகளுக்கு கூடுதல் கொள்முதல் விலையை வழங்குகின்றனர். போராட்டங்கள் நடந்தாலும் தட்டுப்பாடின்றி பாலை மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம். வழக்கமான விற்பனை தான் நடக்கிறது. கோடை காலம் என்பதால், தற்போது பால் வரத்து குறைந்துள்ளது. இது ஆண்டுதோறும் உள்ள பிரச்னை. இதற்கு விவசாயிகள் தீவன பற்றாக்குறையை காரணமாக கூறுகின்றனர்.
பால் பொருட்கள் உற்பத்தி, நாடு முழுவதும் வழக்கமாக இந்த சீசனில் குறைந்து காணப்படும். கூட்டுறவு சங்கங்களின் அவசியத்தை விவசாயிகள் உணர்ந்துள்ளனர். பால் வரத்து 24 மணி நேரத்துக்குள் அதிகரிக்க துவங்கி உள்ளது. தட்டுப்பாடின்றி பால் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.