மனைவி மாயம்
கணவன் புகார்
கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கரூர் - ஈரோடு சாலை, ஆண்டாங்கோவில் மேல்பாகம், ஆத்துார் பிரிவு
பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி, 26; கூலி தொழிலாளி. இவரது மனைவி காவ்யா, 21; இவர் கடந்த, 14ம் தேதி மாலை, வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவர் கைது
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே, புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக, முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தென்னிலை போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி உள்ளிட்ட போலீசார், கடைவீதி பகுதி யில், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள, புகையிலை, குட்கா பொருட்களை, பீடா கடையில் விற்றதாக மாரிமுத்து, 85; என்பவரை, தென்னிலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சாலை விபத்தில்
தொழிலாளி உயிரிழப்பு
குளித்தலை அருகே, அய்யம்பாளையம் பஞ்., குருணிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மும்முடிவேந்தன், 34, கூலி தொழிலாளி. இவர், 'ஃபேஷன் ப்ரோ' பைக்கில் கடந்த 17ம் தேதி இரவு 7:00 மணியளவில், குருணிகுளத்துப்பட்டி - தேவர்மலை நெடுஞ்சாலையில் முனியப்பன் கோவில் அருகே, சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மும்முடிவேந்தனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மும்முடிவேந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் கண்ணம்மாள், புகாரின்படி, சிந்தாமணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுவிற்ற 9 பேர் கைது
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம்
அரவக்குறிச்சி, வாங்கல், லாலாப்பேட்டை, பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக கோபால
கிருஷ்ணன், 50; பெரியசாமி, 50; சேகர், 61; சோளியப்பன், 66; கோவிந்தராஜ், 73; பழனியப்பன், 62; கிருஷ்ணமூர்த்தி, 50; மஞ்சுளா, 46; தங்கதுரை, 45; ஆகிய, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 117 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பைக் மோதி
மூதாட்டி பலி
குளித்தலை அருகே திம்மாச்சிபுரம், குடித்தெருவை சேர்ந்தவர் பாக்கியம், 71. இவர், நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில் காவிரி ஆற்றுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பைக், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாக்கியத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பாக்கியம் மகன் பெரியசாமி புகாரின் படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பிரதோஷத்தை ஒட்டி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நந்தி பகவானுக்கு நேற்று மாலை, 4:30 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர், நந்தி சிலைக்கு மஹா தீபாராதனை நடந்தது. இதில் கரூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மாயனுாரில்மீன் விற்பனை தீவிரம்
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. கதவணை பகுதியில் தேக்கப்படும் தண்ணீரில் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து வந்து, வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது ஆற்றில் குறைவான தண்ணீரே இருப்பதால் மீன் வரத்து குறைந்துள்ளது. ஜிலேபி மீன் கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களை வாங்குவதற்கு, குளித்தலை, கரூர், புலியூர், மணவாசி, ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். நேற்று, 200 கிலோ வரை, மீன்கள் விற்பனை செய்யப்பட்டதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அம்மன் கோவில்களில்
சிறப்பு அபிஷேகம்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், புன்னம், சேமங்கி மாரியம்மன், நொய்யல், அத்திப்பாளையம், தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு
அபிஷேகம் நடந்தது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாடியில் இருந்து
தவறி விழுந்தவர் பலி
குளித்தலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த மன நலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
குளித்தலையை அடுத்த, மத்தகிரி பஞ்., ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன், 43, மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரிடம், கடந்த 17ம் தேதி அன்று, வீட்டு மாடியில் காய வைக்கப்பட்டிருந்த மிளகாயை எடுத்து வரும்படி, அவரது தாய் மாரியாயி கூறினார்.
அப்போது, மாடிக்கு சென்ற ரங்கநாதன், எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ரங்கநாதன் உயிரிழந்தார். இது குறித்து மாரியாயி கொடுத்த புகாரின் படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெருமாள் கோவிலில்
சிறப்பு வழிபாடு
தேய்பிறை ஏகாதசியை ஒட்டி, சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி அருகே சேங்கல்மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. தேய்பிறை ஏகாதசியை ஒட்டி, இங்கு, சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை, தோகைமலை
பகுதிகளில் மழை
கரூர், மார்ச் 20-
குளித்தலை மற்றும் தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில், நேற்று திடீரென மழை பெய்தது.
வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி, தமிழகத்தின் நிலப்பரப்புக்கு மேல் நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 17ல் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை, குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, நச்சலுார், நங்கவரம், பொய்யாமணி, பணிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
கரூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் மழைத்துாறல் இருந்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், நேற்று மாலை, திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், அரவக்குறிச்சி, 16.2 மி.மீ., அணைப்பாளையம், 9.4 மி.மீ., க.பரமத்தி, 1.8 மி.மீ., ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 2.28 மி.மீ., மழை பதிவானது.
அ.தி.மு.க., நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணராயபுரம், மார்ச் 20-
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம், ஆர்.புதுக்கோட்டை, வளையகாரன்புதுார் ஆகிய இடங்களில் அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்களை சந்தித்து, வரும் லோக்சபா தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பூத் கமிட்டி செயல்பாடு குறித்து கட்சியினருக்கு எடுத்துரைக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாரி, கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்காப்பு கூட்டியக்கம்
சார்பில் ஆலோசனை
கரூர், மார்ச் 20-
உலக தமிழ்காப்பு கூட்டியக்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில், கரூரில் தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், தமிழகத்தில் உள்ள, திருக்கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்தி, கரூரில் வரும், 25ல் மாநில அளவிலான மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேரூர் ஆதினம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுரு சுவாமிகள், தொழில் அதிபர்கள் தங்கராஜ், செங்குட்டுவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
24ல் வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி முகாம்
கரூர், மார்ச் 20-
கரூரில், வரும் 24ல் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இதுகுறித்து கரூர், பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கை: பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் 24ல் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், பயிற்சி நடக்கும் நாளன்று காலை, 10:30 மணிக்குள் நேரடியாக பங்கேற்கலாம். பயிற்சி குறித்த மேலும் விவரங்களுக்கு 04324 294335, 7339057073 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூரில் 'பலே' திருடன் கைது: 105 பவுன் நகைகள் மீட்பு
கரூர், மார்ச் 20-
கரூரில் இரு இடங்களில் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார், 105 பவுன் நகைகளை மீட்டனர்.
கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் ஜவுளி கடை நடத்துபவர் பாண்டியன், 55. இவரது வீட்டில் கடந்த, 13ல், 103 பவுன் நகைகள் திருடுபோனது. அதேபோல் கரூர் சோழன் நகர், இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்த ஆயில் வியாபாரி குமாரசாமி, 49, வீட்டிலும், 2 பவுன் நகை, 20 கிராம் வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் திருடுபோனது.
இரு சம்பவங்கள் குறித்து கரூர் டவுன் போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில் இரு சம்பவங்களில் கைவரிசை காட்டியது, திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை சேர்ந்த பாலாஜி, 34, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 105 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர். ஒரு வாரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை, கரூர் எஸ்.பி.,
சுந்தரவதனம் பாராட்டினார்.
மாவட்ட நுாலகத்தில் வளர்ச்சி பணி ஆய்வு
கரூர், மார்ச் 20-
கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், நுாலக நண்பர்கள் திட்டம், நுாலக வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
அதில், நுாலக நண்பர்கள் திட்டம் நடைமுறை குறித்து, தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நுாலக வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நுாலக நண்பர்கள் திட்டத்தில், நன்கொடை உறுப்பினர்கள் 167 பேருக்கான தொகை, 5,010 ரூபாயை பொறியாளர் சிவக்குமார் வழங்கினார். கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாடநுால்களை, கரூர் பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம் வழங்கினார். பிறகு, மாவட்ட மைய நுாலக தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட மைய நுாலகர் சிவக்குமார், கிளை நுாலகர் மோகனரங்கன் உள்பட
பலர் பங்கேற்றனர்.