கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் குடிநீர் கோரி, பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாதானபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டு மகாதானபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, குழாயில் சேதம் ஏற்பட்டு குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நேற்று காலை 8:00 மணி அளவில், மகாதானபுரம் - மேட்டு மகாதானபுரம் சாலையில், காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார், அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் பேசி, பழுதடைந்த குழாய், விரைவில் சீரமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்
பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.