கரூர்: கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில் செயல்பட்டு வருவதால், பெண் போலீசார் மற்றும் புகார்தாரர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் கரூர் இருந்தபோது கடந்த, 1994ல், கரூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷனை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
கரூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகும், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பழைய கட்டடத்தில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் உள்பட, 15க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால், போதிய இடவசதி இல்லாமல், பெண் போலீசார் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில், ஸ்டேஷனை சுற்றி மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால், கொசுத் தொல்லை ஏற்படுகிறது. பழைய கட்டடம் என்பதால், மழை காலங்களில் நீர் கசிவும் ஏற்படுகிறது.
கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் டவுன் சரக பகுதிகளை சேர்ந்த கரூர் டவுன், வெங்கமேடு, வெள்ளியணை, தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், வாங்கல் உள்ளிட்ட ஆறு போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், பெண்கள் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்படுகிறது. சில நாட்களில் இருதரப்பை சேர்ந்த, புகார்தாரர்கள் அதிக அளவில் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.
போதிய இடம் இல்லாததால், விசாரணை பாதிக்கப்படுவதுடன், புகார்தாரர்களுக்கு இடையே தகராறு ஏற்படுவது, வாடிக்கையாக உள்ளது. எனவே, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புதிய கட்டடம் அல்லது இட வசதி உள்ள இடத்துக்கு மாற்ற, மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.