கரூர்: கரூர் அருகே, உயர்மட்ட பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூர் அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே, இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த பாலங்களின் வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் நோக்கி வரும் சாலையில் அமராவதி ஆற்றின் உயர்மட்ட பாலத்தின் ஓரத்தில், நடைபாதை சிலாப் கற்கள் சேதமடைந்துள்ளன. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரையில் இருந்து வந்த, வாகனம் ஒன்று பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு, ஆற்றில் விழுந்தது. அந்த இடத்தில், நெடுஞ்சாலை துறையினர், போலீசார், இரும்பு டிரம்களை வைத்து, பிளாஸ்டிக் டேப் சுற்றி தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, உயர்மட்ட பாலத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக பாலத்தில், தார் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனால், கரூரில் இருந்து, மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள், அருகில் உள்ள பழைய பாலத்தின் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.