சின்டெக்ஸ் தொட்டியை
மாற்ற கோரிக்கை
கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில், ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டுக்காக, கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. தற்போது, இந்த தொட்டி மற்றும் குழாய்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கரூரில் சமீபத்தில் பெய்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் ஸ்டாப்பில் இருக்கைகள்
அமைக்க வேண்டுகோள்
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்மடை பஸ் ஸ்டாப்பில், எம்.பி., நிதியின் கீழ், பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் வசதிக்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அதில் இருந்த இருக்கைகள் உடைந்த நிலையிலும், சில இருக்கைகளை மர்ம நபர்கள் திருடியும் சென்றுவிட்டனர். இதையடுத்து, புதிய இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால்,
மண்மங்கலம், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், பரமத்தி வேலுார் பகுதிகளுக்கு செல்ல, பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், நீண்ட நேரம் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, செம்மடை பஸ் ஸ்டாப், நிழற்கூடத்தில் புதிதாக இருக்கைகள் அமைக்க வேண்டும்.
தென்னிலையில் ரவுண்டானா
அமைக்கப்படுமா?
கரூர் - கோவை நெடுஞ்சாலையில் தென்னிலை உள்ளது. இப்பகுதியை சுற்றி உள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தென்னிலை பஸ் ஸ்டாப் வந்து, இங்கிருந்து கோவை மற்றும் கரூர் பகுதிக்கு தினமும் பஸ்சில் சென்று வருகின்றனர். ஆனால், தென்னிலையில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், தனியார், அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், தென்னிலை பஸ் ஸ்டாப் பகுதியில் ரவுண்டானா இல்லாததாலும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே தென்னிலை பஸ் ஸ்டாப்பில், ரவுண்டானா அமைக்க வேண்டும்.