நாமக்கல்: நாமக்கல் அடுத்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல, 13.06 கோடி ரூபாய் மதிப்பில், மலைப்பாதை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகே நைனாமலை உள்ளது. இங்கு, 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில், பல்லவ மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மேலும், கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில், வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும்.
மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான, 'அரிவாள் பாழி'யும் மற்றும் 'அமையா தீர்த்தம்' எனும் 'பெரிய பாழி'யும் அமைந்துள்ளது, இக்கோவிலின் சிறப்பு. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த மாதத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர்.
இக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில், மலைப்பாதை அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, வாகனங்கள் செல்லும் வகையில், 13.06 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மலைப்பாதை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து, சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், சின்ராஜ், எம்.எல்.ஏ.,க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்று, மலைப்பாதை அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர்.