எருமப்பட்டி: பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத, 900 மாணவர்களின் வீடுகளுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், இன்று நேரில் சென்று அழைத்து வர உள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த வாரம் நடந்தது. இந்த தேர்வில் அனைத்து மாவட்டத்திலிருந்தும், 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுத வராதவர்கள் என, 900 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, பள்ளி வராதது குறித்து விளக்கம் கேட்குமாறும், தற்போது நடக்கும் மீதமுள்ள தேர்வுகளில் கலந்து கொள்ள கட்டாயம் அழைத்து வர வேண்டும் என, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கல்வித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதனால், இன்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொடுக்கும் பட்டியல்படி பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் நேரில் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
மாவட்டம் முழுவதும், 900 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த மாணவர்கள், 2021ல் கொரோனா காலத்தில் பள்ளிக்கு வராமல் நின்றவர்கள். ஆனால் அப்போது, 'ஆல்பாஸ்' என்பதால் அவர்களையும் அரசு தேர்ச்சி பட்டியலில் சேர்த்தது. அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என கூறிய போதும், லாரி பட்டறை, பெயின்டிங், கட்டுமான பணிக்கு சென்றதால் பள்ளிக்கு வர வில்லை. நாளை (இன்று) நடக்கும் தேர்வுக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று, மீதமுள்ள தேர்வுகளை எழுத வர வேண்டும் எனவும்; எழுதாத தேர்வுகளை ஜூன் மாதத்தில் எழுதிக் கொள்ளலாம் என, அறிவுறுத்தி கட்டாயம் அழைத்து வர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.