ப.வேலுார்: ப.வேலுார் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து, தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
ப.வேலுாரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை, ப.வேலுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி., கலையரசன், இன்ஸ்பெக்டர் இந்திராணி, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய்த்துறையினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் திருவிழாவை நடத்த, எட்டுப்பட்டி கிராம மக்கள் ஒப்புக்கொண்டனர்.
அதன்படி மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கியது. வரும், 3ல் வடிசோறு நிகழ்ச்சி, மாலை, 4:00 முதல் 7:00 மணி வரை தேருக்கு பூஜை, 4ல் தேரோட்டம், காலை, 11:00 முதல் 2:00 மணி வரையிலும், மாலை, 3:00 முதல் 6:00 மணிக்குள் தேரோட்டத்தை முடிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.