சிவன் கோவில்களில்
பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தையொட்டி, குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பிரதோஷ நாளான நேற்று, குமாரபாளையம் அக்ரஹாரம், காசி விஸ்வேஸ்வரர்; கோட்டைமேடு, கைலாசநாதர்; திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், அங்காளம்மன், சவுண்டம்மன், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர், உள்ளிட்ட கோவில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மின் கசிவால் விபத்து
பரமத்தி அருகே, மாணிக்கம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 37; விவசாயி. குடும்பத்துடன் அதே பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மின் கசிவு காரணமாக திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் வீடு முழுவதும் தீப்பிடித்து, வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆபத்தான மின் கம்பம்
நாமகிரிப்பேட்டையில் இருந்து ஆர்.புதுப்பட்டி செல்லும் வழியில், ஆர்.பி., காட்டூர், பாரதி நகர் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், உடைந்த நிலையில் உள்ளது. எப்போதும் விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் கடந்து செல்கின்றனர்.
மேலும், பள்ளி மாணவர்கள் இப்பகுதியில் நின்று தான், பஸ் ஏறி செல்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், உடைந்துள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூங்கா பணிகளை கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அன்பு நகர்-1 பகுதியில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 38 லட்சம் ரூபாய் மதிப்பில், பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அப்பணிகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங், நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஒப்பந்தகால அளவு ஆகியவை குறித்து, நகராட்சி பொறியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அன்பு நகர்--3 பகுதியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், பூங்கா மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள், குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் நகராட்சி பொறியாளர் சுகுமார், திருச்செங்கோடு தாசில்தார் பச்சைமுத்து, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மரவள்ளிக்கு உரிய விலை
கொ.ம.தே.க., தீர்மானம்
எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டிப்பட்டியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், விவசாய அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
எருமப்பட்டி ஒன்றியம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், விவசாய அணி ஆலோசனை கூட்டம், பொட்டிரெட்டிப்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த விவசாய அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மணி முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் சேகர் வரவேற்றார்.
கூட்டத்தில், மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய விலை வழங்க வேண்டும்; கரும்பு டன்னுக்கு குறைந்தது, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்; இன்றைய சூழ்நிலைக்கேற்ப விவசாயத்தை நவீன முறையில் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய அணி தலைவர் பாலசுப்பரமணி, செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்
ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, குழந்தை வரம் வேண்டி வேண்டுதல் வைத்தவர்கள், குழந்தை பிறந்தவுடன் குடும்பம் சகிதமாக கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையை படுக்க வைத்து கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வரும், 27 மாலை தீமிதி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் எட்டுப்பட்டி ஊர் தர்மகர்த்தா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
துாசூரில் சுகாதார திருவிழா
எருமப்பட்டி வட்டார அளவிலான சுகாதார திருவிழா மற்றும் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம், நேற்று கொடிக்கால்புதுார் பஞ்., துாசூரில் நடந்தது. முகாமிற்கு சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரபாகரன் தலைமை வகித்தார். எம்.பி., சின்ராஜ் கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்து, 8 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினார். முகாமில், சித்த மருத்துவம், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், குடும்ப நலன், காசநோய் ஊட்டச்சத்து, தொழு நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதில், பஞ்., தலைவர் சுகுணா, வட்டார மருத்துவர் லலிதா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
கழுத்தை அறுத்து மூதாட்டி கொலை
பள்ளிபாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி பாவாயி, 70; கணவர் இறந்துவிட்டதால், தனியாக வசித்து வருகிறார். நேற்று மாலை, 6:00 மணிக்கு வண்ணாம்பாறை அருகே, கரும்பு தோட்டத்தில் பாவாயி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த தோட்ட உரிமையாளர், பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பாவாயி சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இலவச கண் மருத்துவ முகாம்
ப.வேலுார், மார்ச் 20--
ப.வேலுார் அரிமா சங்க சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமில், கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை நடந்தது. கண்புரை உள்ள, 136 நோயாளிகள், இலவச அறுவை சிகிச்சைக்கு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். புறநோயாளியாக, 280 பேர் சிகிச்சை பெற்றனர்.
சுற்று வட்டாரத்தை சேர்ந்த கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனுார், பரமத்தி, வெங்கரை, இடையாறு, ப.வேலுார் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, இலவசமாக சிகிச்சை பெற்றனர். மாதந்தோறும் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது ப.வேலுார் அரிமா சங்க தலைவர் சுரேஷ், செயலாளர்கள் சசிகுமார், குமார், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
22ல் திருச்சியில் உரிமை மீட்பு மாநாடு
பள்ளிபாளையம், மார்
ச் 20-
திருச்சியில் உரிமை மீட்பு மாநாடு வரும், 22ல் நடைபெறும் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பள்ளிபாளையம் வட்டாரம் சார்பில் முப்பெரும் விழா, பள்ளிபாளையம் அருகே, செங்குட்பாளையம் பகுதியில் உள்ள இயக்க கட்டடத்தில் நடந்தது. வட்டார தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் தனராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மயில் பேசினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆசிரியர்கள், மிகுந்த மன உளைச்சலுடன் சமீப காலமாக பணியாற்றி வருகின்றனர். கற்பித்தல் பணி பாதிக்கப்படும் வகையில் பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் கற்பித்தல் பணி மேற்கொள்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு திருச்சியில் வரும், 22ல் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் வளர்ச்சி திட்டம்
மானியத்தில் பண்ணை கருவி
மோகனுார், மார்ச் 20-
மோகனுார் வட்டாரத்தில், 2022 - 23ம் ஆண்டுக்கான, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், சின்னபெத்தம்பட்டி, ஒருவந்துார், அரூர், ஆண்டாபுரம், மாடகாசம்பட்டி, நஞ்சை இடையாறு மற்றும் காளிபாளையம் ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, பண்ணை கருவி, 'கிட்டு'கள் வழங்கும் நிகழ்ச்சி, மோகனுார் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்தார்.
மோகனுார் வட்டார அட்மா குழுத்தலைவர் நவலடி, வேளாண் இணை இயக்குனர் துரைசாமி ஆகியோர், விவசாயிகளுக்கு பண்ணை கருவி, 'கிட்டு'களை வழங்கினர். இந்த திட்டத்தில், கடப்பாரை, மண்வெட்டி, களை கொத்து, கதிர்வாள், காரைச்சட்டி ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது. வேளாண் அலுவலர் சுரேஷ், துணை வேளாண் அலுவலர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
உழவர் சந்தையில் காய்கறி
ரூ.8.68 லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல், மார்ச் 20-
நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
வார இறுதி நாட்களில், இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். அதன்படி, 198 விவசாயிகள், நேற்று, 23 ஆயிரத்து, 335 கிலோ காய்கறிகள், 4,490 கிலோ பழங்கள் என, மொத்தம், 27 ஆயிரத்து, 825 கிலோ விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
அவற்றை, 5,565 நுகர்வோர் வாங்கிச் சென்றனர். அதன் மூலம், 8 லட்சத்து, 68 ஆயிரத்து, 870 ரூபாய் அளவுக்கு விற்பனையானது. நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று, தக்காளி கிலோ, 20 ரூபாய், கத்தரி கிலோ, 30, பீட்ரூட், 36, கேரட், 36, பீன்ஸ், 56, இஞ்சி, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சோமேஸ்வரர் கோவிலில்
பிரதோஷ சிறப்பு வழிபாடு
சேந்தமங்கலம், மார்ச் 20-
பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, சேந்தமங்கலம் சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சிவன் கோவிலில், நந்தி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் மஞ்சள், திருமஞ்சனம், வாசனை திரவியங்கள், பால், தயிர், இளநீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நந்தி பகவானும், சிவபெருமானும் சிறப்பு அலங்காரத்திலும், சவுந்தரவள்ளி அம்பாள் ரிஷப வாகனத்திலும் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில், கைலாசநாதர் மற்றும் நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ப.வேலுாரில் காவிரி கரையில் உள்ள புதிய காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதேபோல் ப.வேலுார் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது. வெங்காய அறுவடை தீவிரம்
சேந்தமங்கலம், மார்ச் 20-
சேந்தமங்கலம் அடுத்த காரவள்ளி, பேளுக்குறிச்சி, வெள்ளாளப்பட்டி, சிங்களாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 50 ஏக்கர் பரப்பரளவில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளிடமிருந்து, வெங்காயத்தை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ வெங்காயம், 20 ரூபாயிலிருந்து, 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம், 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். ஊருக்குள் வராத பஸ் சிறைபிடிப்பு
குமாரபாளையம், மார்ச் 20-
குமாரபாளையம் நகரிலிருந்து, சேலம் செல்லும் தனியார் பஸ்களில் சில, பல்லக்காபாளையம் ஊருக்குள் வந்து செல்லாமல், சேலம்-கோவை புறவழிச்சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, 10:45 மணிக்கு, சேலம் செல்வதற்காக பவானியிலிருந்து தனியார் பஸ் ஒன்று, பல்லக்காபாளையம் புறவழிச்சாலை வழியாக சேலம் செல்லும்போது, பஸ்சை சிறைபிடித்தனர். தொடர்ந்து டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் நின்றன. குமாரபாளையம் போலீசார், பஸ் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததையடுத்து, மக்கள் களைந்து சென்றனர்.