நாமக்கல்: 'கடந்த, 2010-2012ல், 'டெட்' தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்லையா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மாநில அரசுகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. அந்த நடைமுறையை பின்பற்றி, தமிழக அரசும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான நிலுவையில்லா அகவிலைப்படி உயர்வு மற்றும் கால வரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில், 6 முதல் பத்தாம் வகுப்பு வரை, கற்றல்-கற்பித்தல் பணி மேம்பட, அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும், குறைந்த பட்சம், 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை யில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிய பிறகே, பணி நிரவல் செய்ய வேண்டும். 2010-2012ல் 'டெட்' தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 3 அம்ச போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும், ஜூலை, 16ல், மத்திய மண்டலம் திருச்சியிலும், அக்., 15ல், தெற்கு மண்டலத்திலும், 2024, ஜன., இறுதியில், சென்னையில் மாநில அளவிலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.