ஓசூர்: ஓசூர் வன கோட்டத்தில் விலங்குகள் வேட்டை, மரங்கள் கடத்தல் தொடர்கதையாக உள்ள நிலையில் பெயரளவுக்கு மட்டும் சோதனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், தமிழக அரசு கவனிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்டம், 1.50 லட்சம் ஹெக்டேரில் உள்ளது. அதில், 50 ஆயிரத்து, 433 ஹெக்டேர் சரணாலயமாக உள்ளது. அங்கு அரிய வகை விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் உள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபரில், 200க்கும் மேற்பட்ட யானைகள், ஓசூர் வன கோட்டத்துக்கு இடம் பெயர்ந்து ஏப்ரல் வரை அப்பகுதியில் முகாமிடும். அப்படி வரும் யானைகள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. 2018ல் ஓசூர் வன கோட்டத்தில் யானைகளை கொன்று தந்தங்களை கடத்திச்சென்றதாக, பெங்களூருவில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவரும் சிக்கினார். இதுபோன்ற சம்பவங்கள் தற்போதும் தொடர்கதையாக உள்ளன.
சந்தனம், தேக்கு போன்ற பல்வேறு ரக மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. இதை வனத்துறையினரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் விலங்குகள் வேட்டை என்பதும் தொடர்கிறது. மின்வேலியில் சிக்கி யானை இறந்த சம்பவமும் நடந்துள்ளது. வனப்பகுதிக்குள் இறக்கும் யானைகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் வனத்துறை மறைக்கிறது.
நாட்டு துப்பாக்கி
ஓசூர் வன கோட்டத்தில் மான், காட்டெருமை, பன்றி போன்ற விலங்குகள், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியால் வேட்டையாடப்படுவதும் தொடர்கிறது. கடந்தாண்டு செப்டம்பரில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் பயன்பாட்டை தடுக்க, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்படும் எனக்கூறிய ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்தி
கேயனி, அறிவிப்புடன் நிறுத்திக்கொண்டார். இதுவரை அதுபோன்ற சோதனை நடக்கவில்லை. அதனால் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் இன்றளவும் நாட்டு துப்பாக்கி நடமாட்டம் உள்ளது.
இந்நிலையில் தேனியில் உள்ள வனத்துறை கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்பட்ட, 'பாரி' எனும், ஜெர்மன் ஷெப்பர்டு நாய், ஓசூர் வன கோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ஜூஜூவாடி, பேரிகை, அந்திவாடி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களில் சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் இது பெயரளவுக்கு நடப்பதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக வனத்தில் இருந்து யானை தந்தம், மரங்கள் வெட்டப்பட்டு
கர்நாடகாவுக்கு தான் பெரும்பாலும் கடத்தப்படுகிறது. ஆனால் கர்நாடகா செல்லும் வாகனங்களை மோப்பநாய் மூலம் சோதனை செய்யாமல் கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை தேவையின்றி வனத்துறையினர் சோதனை செய்கின்றனர். வனத்துறை பெயரளவுக்கு சோதனை செய்வதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.