முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் வறட்சி பகுதியாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன், மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
முதுகுளத்தூர் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவிக்க கோரியும், வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கவும், பயிர்க்காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நூறு சதவீதம் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலுகா செயலாளர் முருகன் கூறியதாவது: தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வறட்சி நிவாரணம் அறிவித்தது போல ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் அறிவிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக மாற்றியதே அரசு தான். விவசாய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தாமல் நிதி ஒதுக்கீடும் செய்யாதது தான் காரணம்.
வைகை அணையில் தண்ணீர் அதிகளவு திறந்து விடப்பட்டாலும் முறையாக தூர்வாரப்படாததால் ஒரு சில ஊர்களுக்கு மட்டும் வந்து சேர்ந்தது. முதுகுளத்தூர் வட்டாரத்தில் தண்ணீர் வராமல் ஏராளமான கண்மாய்கள் வறண்டுள்ளன.
மாவட்டத்தில் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆளுங்கட்சியில் இருந்தும் இதுவரை முதல்வர் சம்பந்தப்பட்ட இலாகா அமைச்சர்களிடம் மக்கள் பிரச்னை குறித்து பேசவில்லை என்றால் எதற்கு இருக்க வேண்டும். நிர்வாகிகள் சண்முகையா, முனியசாமி, தர்மலிங்கம், திருமலை உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.