திருப்பூர்:நடப்பு மாதம் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் நடைபெற்ற மண்டலக்குழு கூட்டங்களில் பேசிய வார்டு கவுன்சிலர்கள், குடிநீர் சப்ளையில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் குறித்து குறிப்பிட்டனர். குடிநீர் சப்ளையில் ஊழியர் பற்றாக்குறை; ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாற்றாக ஊழியர் நியமிக்க வேண்டும்; திட்டக்குடிநீர் வினியோகப் பணியில் உள்ள ஊழியர்கள் ஆழ்குழாய் கிணற்று நீர் வழங்கும் பணியையும் கூடுதலாக கவனிக்க வேண்டும்; ஊழியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும்; சுழற்சி முறையில் உரிய சப்ளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனால், இப்பிரச்னை குறித்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து நேற்று மாலை, மாநகராட்சி கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ். உமா மகேஸ்வரி, உதவி கமிஷனர்கள், குடிநீர் பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
கடந்தாண்டு குடிநீர் அளவு குறைவாக பெற்ற நிலையிலும், முறையாக குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது தேவையான அளவு குடிநீர் இருந்தும் சப்ளையில் குறைபாடு நிலவுகிறது. நான்கு முறை சப்ளை செய்ததாக பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் இரு முறை மட்டுமே சப்ளை நடைபெற்றுள்ளது.
கடந்த நான்கு மாதம் முன்னரே, குடிநீர் பணிகள் குறித்து கூட்டம் நடத்தி, மண்டல வாரியாக உதவி பொறியாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள், தங்கள் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை.
எனவே, குடிநீர் வழங்குவதை முறையாக நிறைவேற்றினால் பெருமளவு பிரச்னை குறைந்து விடும். அதில் முழு ஈடுபாட்டுடன் அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
குழாய் உடைப்புகள் சரி செய்ய நிதி ஒதுக்கீடு, ஊழியர்கள் வழங்கியும், குழாய் உடைப்பு சரி செய்யாமல் குடிநீர் வீணாவதும், இதனால், மக்கள் அவதிப்படுவதும் சகஜமாக உள்ளது.