பொங்கலுார்:பொங்கலுாரில், அம்பேத்கார் நகர், திருவள்ளுவர் நகர், அயோத்திதாசர் பண்டிதர் தெரு, எட்டி மலை சீனிவாசன் தெரு, கக்கன் தெரு, கலைஞர் தெரு, ராஜீவ் நகர், சின்ன வேலாயுதம் பாளையம், இந்திரா காலனி ஆகிய பகுதிகள் உள்ளன.
இப்பகுதிகளில் தனிநபர் கழிப்பறை, தெருவிளக்கு, நியாய விலை கடை, நுாலகம், விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், பெயர் பலகை, மனை பட்டா, மயான வசதி, சமுதாயக்கூடம், கைப்பம்பு அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி நிர்வாகம் போன்ற அலுவலகங்களில் பொதுமக்கள் தொடர்ந்து மனு கொடுத்துள்ளனர்.
ஆனால், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொங்கலுார் ஒன்றிய அலுவலகம் முன், மக்கள் வழிகாட்டி இயக்க தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.