மதுரை, : மதுரை மாநகராட்சி 41 வது வார்டில் ஐராவதநல்லுார், டீச்சர் காலனி, கீரைத்தோட்டம், தெப்பக்குளம், மருதுபாண்டி நகர், பூக்காரத் தெரு, கிருபானந்த வாரியா நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்., காலனி பகுதிகள் உள்பட பல பகுதிகள் உள்ளன 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு அடிப்படை வசதி இல்லாதது பெரும் பிரச்னையாக உள்ளதென மக்கள் வேதனை தெரிவித்தனர்.
-ஐராவதநல்லுார் முருகதாஸ் கூறியதாவது:
விரட்டும் தெரு நாய்கள்
நுாற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. சாலைகளில் செல்வோரை விரட்டுவது, கடிப்பது என, நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. அவற்றின எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சியின் சுகாதாரத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் சாலைகளில் நடந்து செல்ல அஞ்சும் நிலை உள்ளது. தெரு நாய்கள் கன்று குட்டிகளை கடித்துக் குதறி இறந்ததும் உண்டு. வார்டு 54ல் இருந்து வார்டு 41 இல் இணைந்த பகுதிகளில் குடிநீரில் கழிவு நீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் உள்ளது. தெருவிளக்கு இல்லாததால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாடுகின்றன.பாதாள சாக்கடை அமைக்காததால் மருதுபாண்டியர்கள் சிலை, டீச்சர்ஸ் காலனி, தெப்பக்குளம் மேட்டு தெரு பகுதிகளில் கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து விடுகிறது, என்றார்.
-சத்யாநகர் பாண்டியன் கூறியதாவது:
துார் வாராத கண்மாய்
காரியனுார் கண்மாயை துார் வாராததால் தண்ணீர் இன்றி விவசாயம் பாதித்துள்ளது. கண்மாயில் தடுப்புச் சுவர் கட்டித் தருமாறு வலியுறுத்தியுள்ளோம். நீண்ட காலமாக முல்லைப் பெரியாறு பைப் லைன் அமைக்கும் பணிகள் தாமதமாகிறது. அம்ருத் திட்டம், வாட்டர் டேங்க் பணிகளும் இதுவரை துவங்கவில்லை. மாநகராட்சி பணிக்காக ரோடு தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குப்பை மேடாக குவிந்துள்ளது. தெய்வ கன்னி தெரு அங்கன்வாடி அருகே இடியும் நிலையில் தண்ணீர் தொட்டி இருப்பதால் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தெருக்களில் கண்காணிப்புக் கேமரா இல்லாததால் திருட்டு, வழிப்பறி, குற்றங்கள் அதிகம் நடக்கிறது. இப்பகுதியை முறையாக கண்காணிக்காததால் மாநகராட்சி பணிகள் தாமதம் ஆகிறது.
-கவுன்சிலர்(தி.மு.க.,) செந்தாமரை கண்ணன் கூறியதாவது:
விரைவில் தீர்வு காண்போம்
மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம். பராமரிப்பு இல்லாத சாலைகள், பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது. சுகாதார குழுவிடம் நாய்கள் தொல்லையை தெரிவித்துள்ளேன். தெருவிளக்குகள் 280 தேவைப்படுகிறது. மாநகராட்சி பணிகளை உடனே முடித்து கொடுக்குமாறு ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் இதற்கான பணிகள் முடிக்கப்படும். தெருவிளக்குகள், முல்லைப் பெரியாறு திட்டங்கள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளிகளுக்கும் நிரந்தர தீர்வு அமைத்துக் கொடுப்போம், என்றார்.