கொஞ்சம் ஏமாற்றம்; கொஞ்சம் எதிர்பார்ப்பு நிறைவேற்றம் மதுரையில் மெட்ரோ ரயிலுக்கு ரூ.8500 கோடியால் மகிழ்ச்சி தமிழக பட்ஜெட் குறித்து பல தரப்பினரும் கருத்து
Added : மார் 21, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
A bit of a disappointment; Fulfillment of some expectations Happy with Rs 8500 crore for metro train in Madurai Many parties comment on the Tamil Nadu budget   கொஞ்சம் ஏமாற்றம்; கொஞ்சம் எதிர்பார்ப்பு நிறைவேற்றம் மதுரையில் மெட்ரோ ரயிலுக்கு ரூ.8500 கோடியால் மகிழ்ச்சி  தமிழக பட்ஜெட் குறித்து பல தரப்பினரும் கருத்து

அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த தமிழக அரசின் பட்ஜெட், அரசு ஊழியர்கள் உட்பட பல தரப்பினருக்கு ஏமாற்றங்களை தந்து சில தரப்பினரது எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. தொழில் துறையினர் எதிர்பார்த்த சலுகைகள், திட்டங்கள் இடம்பெறவில்லை.

‛தகுதியுள்ள' குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 என அறிவிக்கப்பட்டாலும், அந்த ‛தகுதி' என்ன என்று அறிவிக்கப்படவில்லை. அந்த சலுகை பெற இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லை. தென் மாவட்ட மக்கள் பாராட்டும்படியாக பட்ஜெட்டில் மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க ரூ.8500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மதுரையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பட்ஜெட் பற்றி மதுரையில் பல தரப்பினரும் வரவேற்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். அவர்கள் கூறியதாவது:



எதிர்பார்த்தது கிடைக்கவில்லை




லட்சுமிகாந்தன், செயலாளர், மடீட்சியா: மதுரையில் 2 சதவீத அளவே தொழிற்துறைக்கான இடம் உள்ளது. அதை 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதை நிறைவேற்றவில்லை. தனியார் நிலங்களை சிட்கோ மூலம் உருவாக்கி கொடுத்தால் நன்றாக இருக்கும். அதையும் செய்யவில்லை. மதுரை - துாத்துக்குடி தொழிற்சாலை வழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. நிறுவனங்கள் வங்கிக்கடன் பெறும் போது பத்திரப்பதிவு அலுவலகம் சென்று ஒப்பந்தம் இடவேண்டும். மீண்டும் கடன்பெறும் போது ஆன்லைனில் பதிந்தால் போதும் என முதல்வர் ஸ்டாலின் 8 மாதங்களுக்கு முன் மதுரை வந்த போது சொன்னார். அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மாறாக ஐ.ஜி. அலுவலகம் சென்று வர கூடுதல் தாமதமாகிறது.

மதுரையில் சிப்காட் தொழிற்பேட்டை குறித்து எதுவும் சொல்லவில்லை. மின்வாகன உற்பத்தி 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. தொழில் துவங்கினால் மானியம் தருமா என குறிப்பிடவில்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் உருப்படியான நல்ல திட்டம். சிறு,குறுந்தொழில் மேம்பாட்டுக்கு ரூ.3268 கோடி ஒதுக்கப்படும் என்றால் அதற்கான விளக்கம் இல்லை. மொத்தத்தில் தொழிற்துறையினர் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லை.



சமாதான திட்டம் அறிவிக்கவில்லை




ஜெயப்பிரகாசம், கவுரவ ஆலோசகர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்: ஜி.எஸ்.டி., வரிக்கு முன்பாக உள்ள வாட் வரி குழப்பத்தால் வணிகர்களுக்கு ஏற்பட்ட வரிக்கான நிலுவைத் தொகையை சரிசெய்ய சமாதான திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தோம். மார்ச் 28 ல் நடக்க உள்ள மானிய கோரிக்கையின் போது இத்திட்டத்தை அறிவிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் தமிழக அரசின் கோரிக்கையை வலியுறுத்த அமைச்சர், அதிகாரிகள், வணிக பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல், மனைகளுக்கு ஒப்புதல் வழங்க ஒற்றை சாளர முறை இந்தாண்டில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ரூ.77ஆயிரம் கோடியில் புதிய மின்உற்பத்தி திட்டம் துவங்கப்படுவதன் மூலம் மின்தடையின்றி தொழில்கள் துவங்கமுடியும். முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் தொழில்வளர்ச்சி இனி சிறப்பாக இருக்கும்.

பத்திரப்பதிவு கட்டணத்தை 4 ல் இருந்து 2 சதவீதமாக குறைத்ததையும் அதை சீரமகை்க வழிகாட்டி திருத்தி குழு அமைத்ததையும் வரவேற்கிறோம்.



கைத்தறி துறை முன்னேறும்




மோகன் ராம், தலைவர், சவுராஷ்டிரா வர்த்தக சங்கம்: கோவை, விருதுநகர், வேலுார், கள்ளக்குறிச்சியில் சிப்காட், சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது தொழில் துறையை மேம்படுத்தும். சிறிய கைத்தறி பூங்கா நிறுவி, சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் அறிவிப்பு நலிவடைந்த கைத்தறித்துறையினரை முன்னேற்றும். மதுரைக்கு மெட்ரோ ரயில் அறிவிப்பை வரவேற்கிறோம். பத்திரப்பதிவு கட்டணம் குறைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். நகரில் பஸ்கள் மோசமாக உள்ள நிலையில், புதுப்பிக்கப்படுவதை விரைந்து செயல்படுத்த வேண்டும். பட்ஜெட்டில் பல துறைகளுக்கும், பல்வேறு பிரிவினருக்கும் பயன் தரும் வகையிலான அறிவிப்புகள் உள்ளன. தொழில் துறையினருக்கான அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்தி தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்.



மெட்ரோ ரயில் திட்டம் வரவேற்கத்தக்கது




பினேகாஸ், வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்: அரசு பள்ளி மாணவர் விடுதியில் படித்து அதன்மூலம் பயன்பெற்று வழக்கறிஞராக உருவாகியிருக்கும் என்னை பொறுத்தவரை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர் விடுதி மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறேன். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி மேம்படும். முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் அதிகமான தொகை ஒதுக்கியிருப்பது அவசியமான அவசரமான ஒன்று. மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பட்ஜெட்டில் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது வரவேற்கப் படவேண்டியது. சென்னைக்கு அடுத்து அனைத்து துறைகளிலும் அதிகமாக வளர்ச்சி பெற்று வரும் மதுரையில் மெட்ரோ ரெயில் அமைப்பதன் மூலம் தென் மாவட்டங்களில் அதிகமான வளர்ச்சி ஏற்படும். அம்பேத்கர் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்க்க 500 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கபட வேண்டியது. உலக சிட்டுக்குருவிகள் தினமான இன்று மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம் அமைக்க தொகை ஒதுக்கீடு செய்தது கூடுதல் சிறப்பு. பறவைகள் இனம் இருந்தால் மட்டுமே மனித இனம் வாழ முடியும் என்பதை பறைசாற்றும் விதமாக சுற்றுச்சூழல் சார்ந்த பட்ஜெட்டாக இருப்பதில் மகிழ்ச்சி.



வேலைவாய்ப்பு இல்லை




சந்திரசேகரன்: மாநில இணை பொது செயலாளர், விஸ்வ ஹிந்து பரிஷத்: பட்ஜெட்டில் இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிப்பது குறித்து அறிவிப்பு இல்லை. புதிதாக தொழில் துவங்குவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. கண்துடைப்பாக பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.



அருமையான திட்டங்கள்




முத்துராஜா, பொருளியல் பேராசிரியர்: தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் வழிக் கல்வி, நுாலக மேம்பாடு, நாட்டுப்புற கலையில் ஈடுபட்டுள்ள மக்கள் முன்னேற்றம், சித்த மருத்துவம் முக்கியத்துவம், 4.2 தொழில் மேம்பாட்டு வசதி, வேலை வாய்ப்புத் திறன்கள் சார்ந்த பயிற்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான முயற்சி, புதிய ரோடு வசதிகள், குடிநீர் வசதிகள், மெட்ரோ ரயில் திட்டங்கள், பசுமை பூங்காக்கள், கடல்சார் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுத்தல் உள்ளிட்ட ஏராள அருமையான திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன. ஆனால் இவை ஒரு முழுமையான, மாநிலத்தின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழகம் நாட்டின் ஒரு பெரிய மாநிலமாக இருந்தாலும், இயற்கை, மனித வளம், ஆங்கிலம் பேசுவோர், வேலை வாய்ப்பு திறன் மிக்கவர்களை கொண்டிருப்பது, உலகளாவிய தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்கும் முக்கிய மாநிலம். இதற்கு ஏற்ப பட்ஜெட்டில் திட்டங்கள் இல்லை. ஐ.நா.,வின் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை தமிழக அளவில் நிறைவேற்றிட, ஜி 20 அமைப்பின் முக்கிய நோக்கமாக உள்ள 'உணவு, வறுமை ஒழிப்பு, நிதி ஆயோக்கின் 2047ல் இந்தியா' என்ற அறிக்கையில் வலியுறுத்தியதை மாநில அளவில் செயலாற்றிட முயற்சி இல்லாதது கவலை அளிக்கிறது.



மெட்ரோவால் மதுரை வளர்ச்சியடையும்




ரேவதி பானு, குடும்பத் தலைவி: பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் 'தகுதியுள்ளவர்களுக்கு' என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெறுவர் என்பதை குடும்பத் தலைவி என்ற முறையில் வரவேற்கிறேன். இத்திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். முக்கிய இடங்களில் இலவச 'வைபை' வசதி ஏற்படுத்தும் திட்டம் மூலம் மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். மெட்ரோ ரயில் திட்டத்தால் மதுரை வளர்ச்சி அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மாசு, ரோடு விபத்துகள் குறையும்.



தொலைநோக்குடன் கூடிய பட்ஜெட்




கே.மோகன், செயலாளர், நுகர்வோர் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம்: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. உடனடியாக இதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் துவங்க வேண்டும். தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 எதன் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை பட்ஜெட் உரையிலேயே அறிவித்திருக்கலாம். மின்திட்டங்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது தொலைநோக்கு பார்வையாக கருதுகிறேன். சொத்து வரி குறைப்பு, சிறு வியாபாரிகளுக்கான தொழில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.



தொழில் வளர்ச்சிக்கு உதவும்




கே.எல்.குமார், மண்டல தலைவர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்: முதல்வரின் காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது பாராட்டுக்குரியது. இதன்மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழக மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.82 கோடி பேர் பெண்கள். இவர்களில் எத்தனை பேருக்கு தகுதியின் அடிப்படையில் ரூ.1000 வழங்கப்படும் என தெளிவுப்படுத்தப்படவில்லை. மதுரையில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. முந்தைய பட்ஜெட்டில் அறிவித்த மதுரைக்கான திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருக்கலாம். மதுரை நகர், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் ஓட்டல் உள்ள அனைத்து தொழில்களின் வளர்ச்சிக்கும் உதவும்.



எல்லா துறைகளுக்கும் முன்னுரிமை




வி.முத்துக்கிருஷ்ணன், தொழிலதிபர்: எந்த ஒரு துறையையும் விடாமல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி சீரமைப்பு, மாணவர்களுக்கு நலதிட்டம், விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி, பள்ளிகளில் காலை உணவு, மகளிர் குழுக்களுக்கு கடனுதவி, வனவிலங்கு சரணாலயம் என ஆராய்ந்து அதற்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த மதுரை மெட்ரோ ரயில் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் வரப்போகிறது என்பது சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப் பருப்பு கிடைத்தது போன்ற செய்தி. நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவு கட்டணம் 4 சதவீத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்ததும் வரவேற்கத்தக்கதே. இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் திருப்திப்படுத்தும் அருமையான பட்ஜெட் இது.



பெண்களுக்கு பயனளிக்கும் பட்ஜெட்




ரட்சனா, கல்லுாரி மாணவி: ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கொண்டு வந்துள்ள காலை உணவுத் திட்டம் பாராட்டுற்குரியது. அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசு பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு உதவிகரமாக இருக்கும். பாலிடெக்னிக், அரசு கல்லுாரிகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மெயின் தேர்வுக்கு நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வந்துள்ளனர். இந்தாண்டு பட்ஜெட் மாணவர்கள், பெண்களுக்கு பயனளிக்கும்.



பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு




தீனதயாளன், பொருளியல் பேராசிரியர்: சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வில் பங்கேற்க கூடிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.7,500 ஒரே தொகையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மாத உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் சிவில் சர்வீஸ் தேர்வர்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம். பெண்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு போதிய நிதிஒதுக்கீடு, வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்களும் இல்லாததும் ஏமாற்றம்.



நமது நிருபர் குழு

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X