மதுரை, மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பார்த்திபன் உள்பட பலர் பங்கேற்றனர். திரளான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் தலைவர் மணிவேல் தலைமையில் அளித்த மனுவில், ''எங்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வு பெற்ற பணியாளருக்கு பென்ஷன், இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
பா.ஜ., மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகர் தலைவர் வீரா, செயலாளர் முத்தையா, துணைத்தலைவர்கள் ராம்குமார், செல்லத்துரை அளித்த மனுவில், ''செல்லுார் ஜீவா ரோட்டில் பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் அருகில் உள்ள காஸ் ஏஜென்சியை இடம்மாற்ற வேண்டும்'' எனத்தெரிவித்துள்ளனர்.
பனையூர் கிராமத்தினர் அளித்த மனுவில், ''விவசாயத்தை பாதிக்கும் வகையில் உள்ள கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றி, மருத்துவ கழிவுகள் கலக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.