மதுரை, : பொதுமக்களுக்கு பறவைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வேண்டும்' என, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் நடந்த உலக சிட்டுக்குருவிகள் தினவிழாவில் பேசினர்.
கல்லுாரியின் விலங்கியல் முதுகலை, ஆராய்ச்சி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட கூடுகளை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
பேராசிரியர் ராஜேஷ் கூறியதாவது:
2013ல் இருந்து 10 ஆண்டுகளாக கூடுகள் செய்து பொதுமக்களுக்கு வழங்குகிறோம். இதனால் பறவைகளின் மீதுமக்களுக்கு அக்கறை ஏற்படும். இதன்மூலம் கூடல்நகர், செல்லுார், ஜெய்ஹிந்துபுரம் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் பயனடைந்துள்ளன.
தற்போது சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அலைபேசி கோபுரங்களால் அவை பாதிக்கப்படுவதில்லை.
வயல்களில் உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகளால் பாதித்த புழுக்களை சிட்டுக்குருவிகள் உண்கின்றன. அதனால் கால்சியம் சத்து குறைந்து, முட்டை ஓடுகள் வலுவிழந்து குருவிகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. மக்களுக்கு பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேயா நற்பணி மன்றம் சார்பில் சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு நடத்தினர். மாணவர்கள், மன்ற உறுப்பினர் சரவணன் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வரன் கூறியதாவது: வெயில் காலங்களில் பறவைகளுக்கு நீர் அவசியம்.
அதற்காக மட்பாண்டங்கள், கூடுகள் பள்ளிக்கு வழங்கப்பட்டன.
முன்பு கூரை, ஓட்டு வீடுகள், மரங்கள் இருந்ததால் அதில் கூடுகட்டின. ஆனால் தற்போது மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல ஆண்டுகளாக பறவைகளுக்கு தினமும் மாடியில் தண்ணீர் வைக்கிறோம், என்றார்.