மதுரை : மதுரை மாடக்குளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதாலும் இரண்டு மடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கி காணாமல் போனதால் வெள்ளநீர் வெளியேற வழியில்லாமல் திணறுகிறது.
கண்மாய் 356 ஏக்கர், நீர்ப்பிடிப்பு பகுதி 100 ஏக்கர் என மொத்தம் 436 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. இதற்கு 3 மடைகள் உள்ளன. மற்ற கண்மாய்களில் மறுகால் பாய்வது அதே கண்மாய்க்குள்ளேயே இருக்கும். மாடக்குளத்திற்கு மட்டும் அரைகிலோ மீட்டர் துாரத்தில் இருந்து மறுகால் பாய்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கண்மாயின் மறுகால் பாயும் இடத்தில் கழிவுநீர் சங்கமிப்பதால் மொத்த கண்மாய் நீரும் பாழாவதாக நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மாரிச்சாமி வேதனை தெரிவிக்கிறார்.
அவர் கூறியதாவது: மூன்றாண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் 400 அடிக்கு கீழே நிலத்தடி நீர் இருந்தது. தொடர் மழை பெய்து கண்மாயில் நீரை தேக்கி வைத்ததால் மாடக்குளம் மட்டுமின்றி எல்லீஸ் நகர் வரை 50 அடியிலேயே நிலத்தடி நீர் கிடைக்கிறது. தற்போது 50 சதவீத தண்ணீர் கண்மாயில் நிற்கிறது. மறுகால் பாயுமிடத்தில் ஏற்குடி அச்சம்பத்து பஞ்சாயத்தினர் குப்பை கொட்டுகின்றனர். கழிவுநீரை அப்படியே வாய்க்காலில் விடுகின்றனர். இதை தாலுகா மற்றும் மாவட்ட அளவிலான விவசாய குறைதீர் கூட்டத்தில் எத்தனை முறை தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. நிலத்தடி நீராதாரத்தை கழிவுநீர் தேக்கமாக மாற்றுவது குறித்து யாரும் கவலைப்படவும் இல்லை.
மாடக்குளம் நிறைந்தால் வெள்ளநீர் வெளியேற 3 மடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொன்மேனி மடையில் வாய்க்கால் பிரச்னையின்றி கிருதுமால் வாய்க்காலோடு கலந்து செல்கிறது. நடுமடை பாசன கால்வாய் துரைசாமி நகருக்குள் செல்லும் போது ஆக்கிரமிப்பில் காணாமல் போனது. கால்வாயை நீர்வளத்துறையினர் அளந்தனர். இப்போது என்ன நிலையில் உள்ளதென தெரியவில்லை. நீர்வழித்தடம் மறைக்கப்பட்டு விட்டது. தெற்கு மடையானது நேருநகர், எல்லீஸ்நகர் வழியாக வெளியேற வேண்டும். எல்லீஸ்நகரில் மாநகராட்சியினர் ரோடு அமைத்து வாய்க்காலை காணாமல் ஆக்கிவிட்டனர். நேருநகரில் மாநகராட்சியால் கால்வாய் சுருங்கி மறைந்து விட்டது. வெள்ளநீர் அதிகமாகி மடை உடைந்தால் விளைவு விபரீதமாகும். தெற்கு மடை, நடுமடை ஆக்கிரமிப்பை அகற்றி வெள்ளநீர் வாய்க்காலை மீட்பதே மாடக்குளம் கண்மாய்க்கு நல்லது, என்றார்.