மதுரை, : மதுரை நகர் ஆயுதப்படை மருத்துவமனையில் போதிய ஆட்கள் இல்லாததால் போலீசாருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
போலீசாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு டாக்டர்கள், நர்ஸ் உள்ளனர். உதவிக்கு பெண் போலீஸ் ஒருவர் உள்ளார்.
தினமும் காலை 9:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதன் பிறகு இரவு 7:00 மணி வரை நர்ஸ் மட்டுமே அனைத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இரவு மருத்துவமனை இயங்காததால் அரசு, தனியார் மருத்துவமனைக்குதான் போலீசார் செல்ல வேண்டும்.
போதிய ஆட்கள் நியமிக்கப்படாததால் சிகிச்சை அளிப்பதிலும், முறையான பரிசோதனை செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. நகர், மாவட்டம், பட்டாலியன் போலீசார் அனைவருக்குமான இம்மருத்துவமனையில் போதிய ஆட்களை நியமித்தும், நவீன மருத்துவ கருவிகளுடனும் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கமிஷனர் நரேந்திரன் நாயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசார் கூறுகையில், ''போலீசார் மட்டுமின்றி தீயணைப்பு வீரர்களுக்கும் இம்மருத்துவமனை பயன்பட உள்ளது. அதற்கேற்ப போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும். மருத்துவ கருவிகளை அமைக்க வேண்டும்.
24 மணி நேரமும் இயங்கினால்தான் இம்மருத்துவமனை அமைத்ததற்கான பலன் கிடைக்கும்'' என்றனர்.