கடலுார்: வெளிநாட்டில் இறந்து விட்ட கணவர் உடலை மீட்டுத் தரக்கோரி, கைக்குழந்தையுடன், பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே பெ.பூவனுார் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி, 24; இவர் நேற்று கடலுாரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் இரண்டு வயது கைக்குழந்தையுடன் வந்து, கலெக்டரிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது கணவர் சக்திவேல், தென் ஆப்பிரிக்கா நாட்டில் சைசெல்லிஸ் என்ற இடத்திற்கு கார்பெண்டர் வேலைக்கு சென்றார். ஓராண்டு ஒப்பந்தம் கடந்த 3ம் தேதியுடன் முடிந்து விட்டது. கடந்த வாரம் ஊருக்கு வருவதாக கூறினார்.
இந்நிலையில் எனது கணவர் இறந்து விட்டதாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஏஜென்ட் தகவல் தெரிவித்தார். அவர் எப்படி இறந்தார் என தெரியவில்லை. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்ப வாழ்வாதாரத்திற்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.