விழுப்புரம்: திண்டிவனத்தில் கிரேட் இந்தியா டிரேடிங் நிதி நிறுவனம் நடத்தி 85 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவர், கிரேட் இந்தியா டிரேடிங் அகாடமி, கிரேட் இந்தியா மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார்.
நிறுவனத்தில் பணம் செலுத்தினால் குறிப்பிட்ட காலத்தில் பன்மடங்கு தொகை தருவதாக கூறியுள்ளார்.
அதனை நம்பி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வேளாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மண்ணுலிங்கம், 51; உட்பட ஏராளமானோர் பணம் செலுத்தியுள்ளனர்.
ஆனால், கூறிய படி பணம் தரவில்லை. நிறுவனத்தை பூட்டி விட்டு மாயகிருஷ்ணன் தலைமறைவானார்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மாயகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது, இதே போல் 7,000 பேரிடம் 85 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, மாயகிருஷ்ணனுக்கு உடந்தையாக செயல்பட்ட திண்டிவனம் ஜக்கம்பேட்டையைச் சேர்ந்த மதி, 50; என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.
இந்த வழக்கில், இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாயகிருஷ்ணன் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.