விருத்தாசலம் : விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் பெய்த திடீர் மழையினால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை, விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி மற்றும் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
விருத்தாசலம் பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் திறந்தவெளியில் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இரவு 7.00 மணிக்கு துவங்கிய மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
இதனால், விருத்தாசலம் பகுதியில் உள்ள வயலுார், மாத்துார், கோமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நேரடி நெல்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மூட்டை நெல் மழையில் நனைந்து சேதமானது. இதனால் நெல் மூட்டை விலை குறையும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'மழையில் இருந்து நெல்லை பாதுகாக்க அரசு தரப்பில் முறையாக தார்பாய் வழங்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது வாடிக்கையாக உள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொட்டகை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.