சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டியில் அளவீடு செய்ய வந்த என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பினர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு கரிவெட்டியில், நேற்று மாலை, நெய்வேலி என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர்.
தகவல் அறிந்த கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர்அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது:
கடந்த 2000 ஆண்டு முதல் 2006 வரை கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி, சாத்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் நிலம் கையகப்படுத்திய போது, வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, மாற்று குடியிருப்பு தருவதாக உறுதி அளித்தது. ஆனால் என்.எல்.சி., அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தற்போது புதிய குடியமர்வு திட்டத்தின் கீழ், ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 லட்சம் என கரிவெட்டியில் நிலங்களை விவசாயிகளிடம் கையகப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் கொடுத்த நிலத்திற்கு சம இழப்பீடு வழங்க வேண்டும். மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும், வாழ்வாதார வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே அதிகாரிகளை அளவீடு செய்ய அனுமதிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
தீக்குளிக்க முயற்சி
கரிவெட்டி கிராமத்தில் நெய்வேலி என்.எல்.சி., நில எடுப்பு அதிகாரிகள் அளவீடு செய்ய நேற்று மாலை வந்தனர்.
அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கரிவெட்டியைச் சேர்ந்த செல்வம் மனைவி விஜயா, 40; சந்திரகாசு மகன் பஞ்சராஜ், 47; மாணிக்கம் மகன் ராமலிங்கம், 50; உள்ளிட்ட விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
போலீசார் மற்றும் பொதுமக்கள் தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர்.