கடலுார், : கடலுார் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் முறைகேடுகள் நடந்ததை தொடர்ந்து, தனியார் கட்டுமான நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார், கடலுார் மாநகராட்சி அலுவலகம், புதுப்பாளையம், கான்வென்ட் தெரு, கோண்டூர் ஆகிய இடங்களில் உள்ள பங்கஜம் பிளானர்ஸ் அலுவலகங்கள், பாரதி சாலையில் உள்ள ஆல்பா கன்ஸ்ட்ரக் ஷன் அலுவலகம் ஆகிய இடங்களில் கடந்த 15ம் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது, இந்நிறுவனங்களில் இருந்து, மாநகராட்சி அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய ஆவணங்கள், அரசு அலுவலர்களுக்கு கொடுக்க வைத்திருந்த கமிஷன் தொகை ரூ. 5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி அலுவலக ஊழியர்கள், பங்கஜம் பிளானர்ஸ் உரிமையாளர்கள் சாரதாம்பாள், ஆறுமுகம், ஆல்பா கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் முருகமணி ஆகியோர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், பங்கஜம் பிளானர்ஸ், ஆல்பா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்களின் கட்டடம் மற்றும் நில வரன் முறை அனுமதி பெறுவதற்கான உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்புத் துறை உதவி இயக்குனர் உமா ராணி உத்தரவிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் நேரடியாக மாநகராட்சி, நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலர்களிடம் கட்டடம் மற்றும் நிலவரன் முறை அனுமதி பெறலாம்.
மேலும், லஞ்சம் தொடர்பாக புகார் இருப்பின் 04142-233816 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.