தேனி : கல்லுாரி மாணவர்கள் போதை வஸ்துக்கள் பயன்படுத்துவதாலும், மாணவிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு வருவதால் ரத்ததானம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பிரசவம், விபத்துக்களில் சிக்குவோருக்கு ரத்த தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி, பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகள் என 3 ரத்தவங்கிகள் இயங்குகின்றன. இதில் பிரசவங்கள், விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற நாள் ஒன்றுக்கு சராசரியாக 52 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இது அவரவர் ரத்த வகைகளுக்கு ஏற்ப மாறுபடும். ரத்தவங்கிகள் ரத்ததான முகாம்கள் மூலமாகவும், ரெட் கிராஸ், ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்புகளிடம் இருந்து ரத்த தானம் பெறுவது வழக்கம். மாவட்டத்தில் பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லுாரிகள் 60 இயங்குகின்றன.
கல்லுாரி மாணவிகளில் 88 சதவீதம் பேர் காலை உணவு உரிய நேரத்திற்கு எடுத்து கொள்ளாதவர்கள், இருப்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் ரத்தசோகை அனீமியாவால் பாதிக்கப்பட்டுகின்றனர். இவர்களும் ரத்ததானத்திற்கு தகுதியற்றவர்களாக உள்ளனர். இப் பரிசோதனை முடிவால் ரத்த வங்கி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்தியன் ரெட் கிராஸ் கவுரவச் செயலாளர் சுருளிவேல் கூறுகையில், ‛இதற்கு முந்தைய ஆண்டுகளில் கல்லுாரி மாணவர்கள், மாணவிகளின் நிலை இவ்வாறு இருந்தது. தற்போது அதீத போதை பழக்கமும், கல்லுாரி மாணவிகளுக்கு ஏற்படும் ரத்த சோகையும் ரத்ததானத்திற்கு தகுதியற்றவர்களாக மாற்றிவருகிறது.
இந்நிலை மாற மாவட்டத்தில் உள்ள 60 கல்லுாரிகளில் ஆண்டுக்கு இரு முறை முழு உடல் பரிசோதனை செய்து ரத்தானத்திற்கு தகுதியானவர்களாக மாற்ற வேண்டும். இல்லையெனில் நமது தேவைக்கு ரத்த தானம் பெற இயலாத நிலைக்கு தள்ளப்படுவோம்.', என்றார்.