உசிலம்பட்டி : பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி செல்லம்பட்டி அருகே சக்கரைப்பட்டியில் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் வந்து ரோட்டில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்தினர்.
ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையாக உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 32 வழங்குகிறது. தனியார் நிறுவனங்களோ ரூ.42 வழங்குகின்றன. பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு வழங்கும் அளவை குறைத்து அனுப்பிவிட்டு, மீதி பாலை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
இதனால் ஆவினுக்கு வழங்கப்படும் பாலின் அளவு குறைகிறது. ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி தர வேண்டும். அல்லது தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கம், நலச்சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று செல்லம்பட்டி அருகே சக்கரைப்பட்டியில், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பெரியகருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி, பொருளாளர் இன்பராஜ் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் வந்தனர். கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். கையோடு கொண்டு வந்த பாலை ரோட்டில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். வாலாந்துார் போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இதனால் உசிலம்பட்டி-மதுரை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.