மதுரை, : தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் 12 ஆண்டுகளாக நியமனங்கள் இல்லாத நிலையில், பட்ஜெட்டில் அதுதொடர்பான அறிவிப்பு வராததால் ஏமாற்றமளிப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது:
'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்து கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவிகள் சேர்க்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளதை வரவேற்கும் நேரத்தில் இத்திட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவிகளையும் சேர்க்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேநேரம் காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவர்கள் அதிகரித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ப ஆசிரியர் நியமனங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் 12 ஆண்டுகளாக தொடர்ந்து காலியாக உள்ளன.
தேர்தல் வாக்குறுதியில் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு இடம்பெறாததும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது குறித்தான அறிவிப்பு இல்லாததும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிப்புகள் இல்லாததும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் இத்திட்டத்தை உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யாதது, குறிப்பிட்ட உணவு தயாரித்து வழங்குவதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்த முயற்சிக்காதது ஏமாற்றம். ஏற்கனவே சத்துணவு அமைப்பாளர்களாக பணிபுரியக் கூடிய ஊழியர்களை கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தி அவர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.