கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே மது போதையில் தகராறு செய்த கட்டடத் தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விஜயாபுரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் மணிகண்டன், 45. மந்தித்தோப்பில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு விஜயாபுரி கிழக்கு தெருவில் நடந்து சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி மாரியப்பன், 56, அப்பகுதி வழியாக நடந்து சென்றவர்களை வழிமறித்து அவதுாறாக பேசினார். இதை மணிகண்டன் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனின் வலது கால் பின் பகுதியில் வெட்டி உள்ளார்.
இதையடுத்து, இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
பின், மணிகண்டன், மாரியப்பனிடமிருந்த அரிவாளை பறித்து, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புதுார் போலீசார், மாரியப்பன் உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த மணிகண்டன், மேல்சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.