மதுரை : சிறு,குறு, நடுத்தர தொழில்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வு குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என தமிழக பட்ஜெட் பற்றி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மின்உற்பத்தியை அதிகரிக்க 14 ஆயிரத்து 500 மெகாவாட் புதிய திட்டங்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி முதலீடு அறிவிப்பு, பசுமை மின் வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ரூ.800 கோடி செலவில் பத்தாயிரம் குளங்கள் துார்வாரப்படுவது, வருவாய் பற்றாக்குறை ரூ.16 ஆயிரம் கோடி குறைந்துள்ளதும் வரவேற்கத்தக்கது.
இருப்பினும் மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்தில் அண்டர் பாஸ் திட்டம் அறிவிக்கப்படாதது, சிறு,குறு, நடுத்தர தொழில்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வு குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. சென்னையை தவிர்த்து மதுரையிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்தினவேலு: பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீத்தில் இருந்து 3 சதவீதமாக குறைத்தது பாராட்டுக்குரியது. இந்த நிதிவலிமை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வழிவகுக்கும். பொது வினியோக திட்டத்திற்கு ரூ.10 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு, உணவு, பாதுகாப்பு துறைக்கு ரூ.16 ஆயிரத்து 262 கோடி, நீர்பாசன நவீனமயமாக்கலுக்கு ரூ.462 கோடி என அறிவித்ததும் வரவேற்புக்குரியது.
சென்னை அம்பத்துாரில் ரூ.120 கோடி மதிப்பில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள், திறன்பயிற்சி மையம், ரூ. 25 கோடி மதிப்பில் தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் திட்டம், கிருஷ்ணகிரியில் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
நீண்டநாள் கோரிக்கையான ஜி.எஸ்.டி., உயர்மட்ட ஆலோசனைக்குழு அறிவிக்காதது ஏமாற்றமே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.