ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தினர், ஈரோடு கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன், திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, 83 தகுதியான மாற்றுத்திறனாளிகள், தகுதி இருந்தும் விடுபட்ட, 17 மாற்றுத்திறனாளிகள் சேர்த்து, 100 பேருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கோரினோம். கடந்தாண்டு ஆக., 26ல் முதல்வரால், 33 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது. மீதி, 67 பேருக்கு பல காரணம் கூறி வழங்க மறுப்பதை மாற்றி, உடன் வழங்க வேண்டும்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் நரம்பு, பக்கவாத பாதிப்பு பிரச்னைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை மற்றும் சான்றிதழ் மருத்துவரை நியமிக்க பல ஆண்டாக போராடி வருகிறோம். கடந்த, ஆக., 2 முதல் டாக்டர் காஞ்சனா நியமிக்கப்பட்டார். இரண்டு மாதம் மட்டுமே சிகிச்சை வழங்கி நிலையில், நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். நரம்பியல், எலும்பு முறிவு சிகிச்சை, சான்று பெற, கோவை அல்லது சேலம் செல்லும் நிலையை மாற்ற வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே வசதியான கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.