அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே கோர விபத்தில், அக்கா-தம்பி பலியானது, பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி, 19; பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை ஒப்பந்த ஊழியர். இவரின் சகோதரி ஞான சவுந்தர்யா, ௨௨; இவருக்கு திருமணமாகி விட்டது. இரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கணவன், குழந்தையுடன் வசித்தார். அதேசமயம் குமாரபாளையத்தில் தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்தார். குமாரபாளையத்துக்கு பைக்கில் நேற்று சென்ற கிருஷ்ணமூர்த்தி, சகோதரியை மட்டும் அழைத்துக் கொண்டு பெரியகொடிவேரிக்கு புறப்பட்டார்.
ஆப்பக்கூடல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, மாலை, 4:30 மணியளவில் சென்றபோது, எதிரேவந்த பொலீரோ சரக்கு வேன் பைக் மீது அதிவேகத்தில் மோதியது.
இதில் தலை நசுங்கி கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்தில் பலியானார். துாக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய ஞான சவுந்தர்யா, பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை, அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.