காங்கேயம்: காங்கேயத்தில் ஹோட்டலை சூறையாடி, உரிமையாளரை குடும்பத்துடன் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகள் இருவர் கோர்ட்டில் சரணடைந்து ஜாமின் பெற்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த, 2021ல் அ.தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவர் ஈஸ்வரமூர்த்திக்கு சொந்தமான நிலத்தை, 15 ஆண்டுகளுக்கு வாடகைக்கு பேசி ஹோட்டல் ஆரம்பித்தார். இதுவரை ஓட்டலுக்காக, 1.30 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் மூன்று மாதங்களாக, கவுன்சிலர் சுதா, அவரது கணவர் ஈஸ்வரமூர்த்தி, சகோதரர் சுரேஷ் உள்ளிட்டோர் ஓட்டலை காலி செய்யுமாறு பெரியசாமியை மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த, 13ம் தேதி இரவு டாரஸ் லாரி மற்றும் கார்களில் முகமூடி அணிந்து வந்த, 20க்கும் மேற்பட்டோர் கும்பல், ஓட்டல் பணியாளர்களை தாக்கியது.
அங்கிருந்த கார் மற்றும் பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். இதுகுறித்து காங்கேயம் போலீசில் பெரியசாமி புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், திருப்பூர் எஸ்.பி., யிடம் தாக்குதல் சம்பவம் குறித்து 'சிசிடிவி' ஆதாரத்துடன், நேற்று புகார் தந்தனர். அ.தி.மு.க., ஒன்றிய கவுண்சிலர்கள் இருவர் இப்பிரச்னையில் தலையிட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், 'காங்கேயம் இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனுக்கு தங்களை அழைத்து, அவரே தயார் செய்த புகார் மனுவில் மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும், அந்த மனுவை ரத்து செய்து, தாங்கள் அளிக்கும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினர். 'தான் சொல்வது போல் நடக்காவிட்டால், தொடர்ந்து தொழில் செய்ய முடியாது என காங்கேயம் இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார். இதுகுறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் வழக்கில் தொடர்புள்ளதாக கூறப்படும் பாப்பினி அ.தி.மு.க., கவுன்சிலர் மைனர் என்கிற பழனிசாமி, 55, வீரணம்பாளையம் அ.தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவர் ஈஸ்வரமூர்த்தி, 50, ஆகியோர், காங்கேயம் கோர்ட்டில் நேற்று சரணடைந்து ஜாமின் பெற்றனர். இந்நிலையில் ஓட்டலை, 20க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் தாக்கும் 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.