டாஸ்மாக் கடையை
அகற்ற வலியுறுத்தல்
சிவகிரி அருகே மின்னப்பாளையம், குலவிளக்கு பகுதி மக்கள், ஈரோடு டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திராவிடம் மனு வழங்கி கூறியதாவது: எழுமாத்துார் பஞ்., எல்லக்கடையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக்கடை, 24 மணி நேரமும் செயல்படுவதால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மக்கள் பாதிக்கின்றனர். டாஸ்மாக் கடையையும், அத்துடன் இணைந்த பார், அனுமதியற்ற பாரையும் அகற்றி மக்கள், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
குறைதீர் கூட்டத்தில்
268 மனுக்கள் ஏற்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார்.
முதியோர் உதவித்தொகை, தொழில் கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 268 மனுக்கள் பெறப்பட்டு, தொடர்புடைய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, மக்களுக்கு வழங்கி, மையத்தை பயன்படுத்த யோசனை தெரிவித்தனர்.
வாய்க்காலில் மிதந்த
ஆண் உடல் மீட்பு
கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த, ஆண் உடலை போலீசார் மீட்டனர்.
நம்பியூர் அருகே எ.செட்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலில், நேற்று காலை அடையாளம் தெரியாத நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. கடத்துார் போலீசார் மற்றும் நம்பியூர் தீயணைப்பு துறையினர், உடலை மீட்டனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
2,000 டன் நெல் வருகை
தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு, 2,௦௦௦ டன் நெல் ஈரோடு கூட்ஸ்ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி, பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பினர். அங்கிருந்து அரவை ஆலைகளுக்கு அனுப்பி, அரிசியாக்கி, ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும்.
விபத்தில் காயமடைந்தவிவசாயி மரணம்
புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள நல்லுாரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, 63; விவசாயியான இவர் கடந்த, 6ம் தேதி ஹீரோ ப்ளஸர் பைக்கில் புளியம்பட்டி நோக்கி சென்றார். நல்லுாரில் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்கா விற்ற வியாபாரி கைது
விஜயமங்கலம், மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் துரைசிங், 31; அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடையில் தடை செய்யபட்ட குட்கா பொருட்களை விற்பதாக, பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு சோதனை செய்ததில், 37 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். துரைசிங்கை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
பஸ் பாஸ் புதுப்பிக்க முகாம்
ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, பஸ் பாஸ் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடக்கவுள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில், வரும், 28ல் நடக்கும் முகாமில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, தங்கள் புகைப்படம் - 6, தேசிய அடையாள அட்டை நகல் - 2, பழைய பஸ் பாஸ் அசல் ஆகியவற்றை வழங்கி பயன் பெறலாம். இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
டி.என்.பாளையத்தில்
வாழை மரங்கள் நாசம்
டி.என்.பாளையத்தை அடுத்த பங்களாப்புதுார், புஞ்சை துறையம்பாளையம், கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கதளி, செவ்வாழை என 2,௦௦௦க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகின.
கொண்டையம்பாளையத்தில் செந்தில் பாஸ்கரனுக்கு சொந்தமான, 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்; நஞ்சை துறையம்பாளையத்தில் ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான, 400-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாகி விட்டன. சேத மதிப்பு குறித்து தோட்டக்கலை துறை, வருவாய் துறையினர் கணக்கெடுப்பு செய்யவுள்ளனர்.
தம்பி தாக்கியதில்
அண்ணன் சாவு
பெருந்துறையை அடுத்த எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 62; இவரின் அண்ணன் ராமசாமி, 67; சகோதரர் வீட்டின் அருகே வசித்தார். பொது தடத்தில் கழிவறை கழிவு நீர் செல்வது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்தது. கடந்த, 14ம் தேதி இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ராமசாமியை கட்டையால் சண்முகம் தாக்கினார். இதில் காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் இறந்தார். ஏற்கனவே பெருந்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சண்முகம், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் அவர் மீதான வழக்கும், கொலை வழக்காக மாற்றப்பட்டது.
டூ வீலர் களவாணி கைது
சத்தியமங்கலம், காந்தி நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம், 34; கடைகளுக்கு கேக், பன் சப்ளை செய்யும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் மாலை சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகில், ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தி, சைடு லாக் போட்டு சென்றார். திரும்பி வந்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அமிர்தலிங்கம் புகாரின்படி சத்தி போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதில் காசிபாளையம், குமரன் கரட்டை சேர்ந்த பூவேந்திரன், 50, டூவீலரை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோபி, கடத்துார் போலீஸ் ஸ்டேஷன்களில், டூவீலர் திருடிய பூவேந்திரன் மீது ஐந்து வழக்குகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
கொடுமுடியில் 2 மி.மீ., மழை
ஈரோடு மாவட்டத்தில் மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில், நேற்று முன் தினம் இரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. பவானியில், 1.6 மி.மீ., கொடுமுடியில், 2 மி.மீ., பதிவானது. பிற இடங்களில் அறிகுறி இருந்தும் மழை பெய்யாததால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பைக்கில் 'லிப்ட்' கேட்டு பயணித்த முதியவர் பலி
புன்செய்புளியம்பட்டியை அடுத்த தேவம்பாளையத்தை சேர்ந்தவர் மதன்குமார், 29; இவரின் சகோதரர் சரவணன், 27; இருவரும் ஹோண்டா ட்விஸ்ட்டர் பைக்கில் நேற்று முன்தினம் இரவு காவிலிபாளையம் நோக்கி சென்றனர். உறவினரான அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து, 60, லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். வாணிச்சிபாளையம் முருகன் காடு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பைக் தடுமாறியதில், சின்னமுத்து தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வனச்சரக அலுவலகத்தில்
விவசாயிகள் போராட்டம்
தாளவாடி மற்றும் ஜீரகள்ளி வனச்சரகத்தில் அட்டகாசம் செய்து வரும், கருப்பன் யானையை உடனடியாக பிடிக்க வேண்டும். விவசாய நிலங்களில் யானைகள் நுழைவதை தடுத்து, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், ஜீரகள்ளி வனச்சரக அலுவலகத்தை, தாளவாடி விவசாய சங்கத்தினர், நேற்று முற்றுகையிட்டனர்.
வனத்துறை உயரதிகாரிகள் வரும் வரை, அலுவலக வளாகத்திலேயே தங்கி சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். ஆசனுார் வனக்கோட்ட அதிகாரி தேவேந்திர குமார் மீனா, பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமதானம் அடைந்த விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பயிர் சேதம் செய்யும் விலங்குகளை
சுட்டுக்கொல்ல அனுமதி வேண்டுமாம்...
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில், சத்தியமங்கலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வன விலங்குகளால் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல வருட போராட்டத்துக்குப் பிறகு, 10 மாவட்டங்களில் காட்டுப்பன்றியை சுட்டு கொல்ல வனதுறையினருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால், இன்று வரை ஒன்றை கூட சுட்டு கொள்ளவில்லை. எனவே, காட்டு பன்றியை சுட்டுக்கொல்ல துப்பாக்கி வழங்க வேண்டும்.
பயிர் சேதம் செய்யும் மற்ற வன விலங்குகளையும், விவசாயிகளே சுட்டு கொல்ல அனுமதிக்க வேண்டும் என்ப உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்டுக்குருவிகள்
தின விழிப்புணர்வு
உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சத்தியமங்கலம் வனச்சரகம் மற்றும் வெற்றி நர்சிங் கல்லுாரி இணைந்து, சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சத்தி வனச்சரகர் பழனிச்சாமி, வெற்றி நர்சிங் கல்லுாரி இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டனர். சிட்டுக்குருவி போல் பள்ளி குழந்தைகள் அணிவகுத்து நின்று அனைவரையும் கவர்ந்தனர்.
விபத்தில் மகன் பலி
தந்தை பலத்த காயம்
கோவை, கோவை புதுார், கோவை கார்டனை சேர்ந்தவர் ரவிசந்திரன், 59; ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு, மகன் கார்த்திக் ராஜாவுடன்,31, காரில் நேற்று முன்தினம் மதியம் வந்தார். பெருந்துறையை அடுத்த சரளை அருகே, முன்னால் சென்ற டேங்கர் லாரியை முந்த முயன்றபோது, நிலை தடுமாறி சென்டர் மீடியனில் கார் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கார்த்திக் ராஜா இறந்தார். ரவிசந்திரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்வாரிய மண்டல
அளவிலான போட்டி
மின் வாரியத்தில் அனைத்து மண்டலங்களுக்கு இடையே கேரம், சதுரங்கம், இறகுபந்து, மேஜை பந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகள், ஈரோடு அருகே நடந்தது. இதற்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி வரவேற்றார்.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், ஈரோடு மேயர் நாகரத்தினம், மின்வாரிய இயக்குனர் சிவலிங்கராஜன் ஆகியோர் பரிசு கோப்பை வழங்கினர். மண்டலம் வாரியாக பரிசு வழங்கப்பட்டது.
கருப்பனை பிடிக்க
கும்கிகள் வருகை
தாளவாடி மலையில், ஜீரகள்ளி வனச்சரகத்தில் திகினாரை, கரளவாடி, அக்கூர்ஜோரை, ஜோரா ஓசூர் உள்ளிட்ட கிராமங்களில், கருப்பன் என்ற ஒற்றை யானை, ஆறு மாதங்களுக்கு மேலாக சுற்றித் திரிகிறது. விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் சேதம் செய்யும் யானையை பிடிக்க, ஏற்கனவே வரவழைக்கப்பட்ட இரு கும்கி யானைகளால் பிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பொம்மன், சுஜய் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் பரிசோதனைக்குப் பின், கருப்பன் யானையை கண்காணித்து கும்கிகள் மூலம் பிடிக்கும் பணி தொடங்கும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.
கால்வாயில் கான்கிரீட்;
கைவிடக்கோரி மனு
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்ட எதிர்ப்பாளர்களான, தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் செங்கோட்டையன், சுதந்திரராசு ஆகியோர், கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் மனு வழங்கி கூறியதாவது:
கீழ்பவானி வாய்க்கால் முற்றிலும் மண்ணால் ஆனது. எனவே வாய்க்காலை மண்ணால்தான் சீரமைக்க வேண்டும். வாய்க்காலில் கான்கிரீட் தளம், கரை அமைக்கப்பட்டால், நிலத்தடி நீர், கசிவு நீர் மூலம் பாசனம் பெறும், ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாலைவனமாகும். இத்திட்டத்துக்காக மாற்றி அமைக்கப்பட்ட புது ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கூடாது. விவசாயம், விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு, முழு பராமரிப்பு பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு கூறினர்.