ஈரோடு: வேலை வாங்கி தருவதாக, 24 பேரிடம், ௧.25 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த மின் வாரிய ஊழியரை, ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி, ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால், 58; ஆனந்தம்பாளையம் பால் சொசைட்டி செயலாளர். பூனாச்சி துணை மின் நிலைய ஒயர்மேன் மூர்த்தி, 45; இவரின் சொந்த ஊர் பவானி, சிங்கம்பேட்டை. மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது. பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் என்று, கோபாலிடம், மூர்த்தி ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய கோபால், எலக்ட்ரீஷியன் ஆனான அவரது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில் நுட்ப உதவியாளர் பணிக்காக, ஏழு லட்சம் ரூபாயை முதற்கட்டமாக தந்துள்ளார். மேலும் மூன்று லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி, மேலும், 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு, தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார். மின்வாரிய அலுவலகத்தில் சேர ஆணையுடன் சென்றபோது, போலி என தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது, முறையாக பதில் அளிக்காமல் தலைமறைவாகி விட்டார். இதேபோல் அந்தியூர், பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், 31, வெற்றிவேல், 27, ஆகியோரிடம், மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக தலா, நான்கு லட்சம் ரூபாயை, மூர்த்தி பெற்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 24 பேரிடம், ஒரு கோடியே, 25 லட்சம் ரூபாய் பெற்று, போலி நியமன ஆணைகளை மூர்த்தி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மூர்த்தியை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இதற்கு மூளையாக இருந்த மற்றொருவரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.