தமிழக பட்ஜெட்டில், 'தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு, உரிமைத்தொகையாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும்' என்ற அறிவிப்பு, குடும்பத்தலைவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தகுதியை எதை வைத்து, தி.மு.க., அரசு நிர்ணயம் செய்துள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் சொன்னது ஒன்று; தற்போது செய்தது ஒன்றாக இருக்கிறது. இதைத்தான் முதல்வர் ஸ்டாலின், 'சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என கூறி வருகிறாரா என, கேள்வி எழுப்புகின்றனர்.
ஆர்.ஹேமலதா, சேலம்: ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும், 1,000 ரூபாய் தருவதாக வாக்குறுதியளித்திருந்தனர். இரண்டு ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இப்போதுதான் அதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பயனாளிகளை தேர்வு செய்ய என்னென்ன செய்ய போகின்றனர் என தெரியவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியதை போன்று, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும், ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 1,000 ரூபாய் வீதம் மொத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சித்ரா, சேலம்: தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பதால், அதிருப்தி அதிகரிக்கிறது என்பதை உணர்ந்து, அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதிலும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு என குறிப்பிட்டிருப்பதால், அனைவருக்கும் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. தேர்தல் அறிக்கையில் ஒன்று கூறுவதும், பதவிக்கு வந்த பின் சமாளிப்பதும், அரசியல் கட்சிகளுக்கு சகஜமாகிவிட்டது.
பி.சங்கீதா, ஒருவந்துார், நாமக்கல்: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், குடும்ப தலைவிக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர். தற்போது வெளியான பட்ஜெட்டில், தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்பது ஏமாற்று வேலை; எந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோல், இலவச பஸ் பயணம் அனைத்து பெண்களுக்கும் என்பதை கைவிட்டு, தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் என கூறவேண்டியதுதானே. தேர்தல் நேரத்தில் ஒரு வாக்குறுதியும், வெற்றி பெற்ற பின், 'அந்தர் பல்டி' அடிப்பதும், தி.மு.க.வுக்கு கைவந்த கலை.
வி.மலர்கொடி, பிள்ளாநல்லுார்: தி.மு.க., அரசு, மகளிர் உரிமை தொகையாக மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை வழங்காமல் இழுத்தடித்து வந்தனர்.
தற்போது, தகுதியான பெண்களுக்கு வழங்க உள்ளதாக, பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது ஏமாற்று வேலை. நகை கடன் தள்ளுபடியில் நடந்தது போல், இறுதியில் உண்மையான பயனாளிகள் ஏமாற்றமடைந்து தான் போவர்.
வி.சசிகலா, கிருஷ்ணகிரி: குடும்ப தலைவி அனைவருக்கும், 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறியதால் மட்டுமே, பெண்கள் ஓட்டு போட்டனர். குடும்ப தலைவிகளுக்குள், என்ன தகுதி என்பது புரியவில்லை. கொடுத்தால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். இல்லையெனில் கொடுக்கவே கூடாது. இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை கொடுத்துவிட்டு ஏமாற்றக்கூடாது. வாக்குறுதியை நம்பி, ஓட்டளித்த எங்களை விட்டு விட்டு, அவர்களுக்கு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் வழங்குவதை தான், தகுதி என்கிறார்களா என விளக்க வேண்டும்.
ஜெ.சல்மா, கிருஷ்ணகிரி: நடக்காத விஷயங்களை வாக்குறுதிகளாக கூறி வெற்றி பெற்ற, தி.மு.க., இன்று ஒவ்வொரு விஷயத்திலும் பொதுமக்களை குறிப்பாக பெண்களை ஏமாற்றி வருகிறது. தற்போது தகுதியுடைய குடும்ப தலைவி என்ற வார்த்தையை பயன்படுத்தி, யாருக்கும் 1,000 ரூபாய் கிடைக்காத வேலையை செய்ய நினைக்கிறது.
பி.சுசீலா, கரூர்: தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு, 'மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதியை, பட்ஜெட்டில் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. செப்டம்பர் மாதம் முதல், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். அப்போது, 28 மாத நிலுவை தொகையை சேர்த்து வழங்க வேண்டும். தகுதியுடைய மகளிருக்கே,1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற நிபந்தனை அதிர்ச்சி அளிக்கிறது.
ஆர்.அமுதா, தர்மபுரி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தலின்போது, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் மூலம் பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பின், 21 மாதங்களாக தன் தேர்தல் வாக்குறுதியை, முதல்வர் ஸ்டாலின் அறிவிக்காமல் ஏமாற்றி வந்தார்.
பட்ஜெட்டில், தகுதியான பெண்களுக்கு, 1,000 ரூபாய் என அறிவித்துள்ளார். தேர்தலின்போது, எந்த தகுதியையும் அறிவிக்காத, தி.மு.க., அரசு, ஆட்சியில் அமர்ந்து விட்டோம் என்பதால், ஓட்டு போட்ட பெண்களை ஏமாற்றி உள்ளது.
ஏ.இந்திராணி, ஓசூர்: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாத உரிமைத்தொகை என மேலோட்டமாக கூறி விட்டு, தகுதியானவர்களுக்கு மட்டும் மாத உரிமைத்தொகை என இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் கூறியது ஒன்று; பட்ஜெட்டில் அறிவிப்பது ஒன்று. தகுதியானவர்கள் என தற்போது அறிவித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பதை, அமைச்சர் சட்டசபையிலேயே அறிவித்திருக்கலாம்.
வித்யா, ஆப்பக்கூடல்: 'மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத்தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து மகளிருக்கும் கிடைக்க வேண்டும். இந்த தொகை ஆறு மாதத்துக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியாக அளித்துவிட்டு, தற்போதைய அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.
சி.நித்தியா, குளித்தலை: அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல்
வாக்குறுதியாக தி.மு.க., அறிவித்திருந்தது. அதை நம்பி, பல லட்சம் குடும்ப தலைவிகள், தி.மு.க.,வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று, 28 மாதங்களை கடந்து, தற்போது இத்திட்டம் குறித்து அறிவித்துள்ளனர். மிகவும் தாமதம் என்றாலும், இதை கேள்விக்குறியான திட்டமாகவே பார்க்கிறோம். குறிப்பிட்டுள்ள தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருப்பது, அனைத்து பெண்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரதி, டி.என்.பாளையம்: தகுதியான குடும்பத்தலைவிகள் யார்? தகுதி இல்லாத குடும்ப தலைவிகளும் உள்ளார்களா? அதை அமைச்சர் விளக்க வேண்டும். தகுதியான குடும்ப பெண்கள் என அமைச்சர் கூறியது, பெண்களை கேவலப்படுத்தும் விதமாக உள்ளது. குடும்ப தலைவிகளின் மனக்குமுறலாக இதை நான் பதிவு செய்கிறேன்.