கடந்த, 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், லோக்சபா தேர்தலின் போதே கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட, ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதே அறிவிப்பை சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சில மணி நேரங்களுக்கு முன் தேர்தல் ஆதாயத்திற்காக,
அ.தி.மு.க., அரசு அறிவித்தது. அதை அமல்படுத்த முடியவில்லை. எனவே, தி.மு.க., அரசு அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட, ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே, ஐந்து சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதிலும், பல லட்சம் பேர் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேபோல, சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், 'ஸ்டாலின் ஏழு' திட்டங்களில், 'தமிழகத்திலுள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்குவோம்' என தெரிவித்தார். ஆனால், நேற்றைய பட்ஜெட்டில்,' தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு, உரிமைத்தொகையாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று நகைக்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம் அடைந்த பல லட்சக் கணக்கான பெண்கள், நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 1,000 ரூபாய் உரிமைத்தொகை அறிவிப்பிலும் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.