ஆத்துார்: ''தமிழக அரசின் பட்ஜெட்டில், பால் விலை உயர்வு அறிவிப்பு இல்லாதது, வேதனை அளிக்கிறது,'' என, ஆத்துாரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த, 17 முதல், பால் உற்பத்தியாளர்கள், ஆவினுக்கு பால் கொள்முதல் நிறுத்தம் மற்றும் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆவினுக்கு, தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.
மேலும் தனியாருக்கு, உற்பத்தியாளர்கள் பால் ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆவின் கொள்முதல் விலையை விட, தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு கூடுதலாக, 10 முதல், 13 ரூபாய் கொடுக்கிறது. கேரளா பால் கூட்டுறவு சங்கத்தில் லிட்டருக்கு கூடுதலாக, 15.80 ரூபாய் வழங்கப்படுகிறது.
பால் கொள்முதல் விலை குறித்து, தமிழக அரசின்
பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்த்தோம்.
ஆனால், பால் விலை உள்ளிட்ட பால்வளத்துறை சார்ந்த எந்த அறிவிப்புகளும் இடம் பெறாதது, பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் சாட்டையை கொண்டு தமிழக அரசு அடித்துள்ளது போன்றுள்ளது.
அரசு, எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருவது வேதனையளிக்கிறது. பால்வளத்துறை மானியக்கோரிக்கையில், பால் கொள்முதல் விலை குறித்த தகவல் இடம் பெறும் என்று நம்பிக்கையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.