தர்மபுரி; தர்மபுரி அருகே, கள்ளக்காதலை கைவிட மறுத்த நண்பரை கொன்ற கூலித்தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.
தர்மபுரி அடுத்த குண்டலப்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாக்யராஜ், 35; அதே பகுதியை சேர்ந்தவர் பெயின்டர் சந்தோஷ்குமார், 35; இருவரும் நண்பர்கள். பாக்யராஜின் மனைவியுடன் சந்தோஷ்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பாக்யராஜ், சந்தோஷ்குமாரை பலமுறை எச்சரித்துள்ளார்.
கிராமத்தார் முன்னிலையில் சமரசம் செய்த நிலையிலும், சந்தோஷ்குமார் கள்ளக்காதலை விடவில்லை. கடந்த, 2020 செப்.,ல் சந்தோஷ்குமாருக்கும், பாக்கியராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த பாக்கியராஜ், கத்தியால் சந்தோஷ்குமாரை குத்தி கொலை செய்துள்ளார். மதிகோன்பாளையம் போலீசார், பாக்கியராஜை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மோனிகா, பாக்கியராஜுக்கு ஆயுள்தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.