சேலம்: சேலத்தில் அனாதை உடல்களை, சொந்த செலவில் அடக்கம் செய்து, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் பெண் போலீசுக்கு, அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். ஏழு ஆண்டுகளில் இதுவரை, நுாற்றுக்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளார்.
சேலம், ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்குமார், 42; இவரின் மனைவி சத்தியம்மாள், 38; சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோகன்குமாரும், கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சத்தியம்மாளும் போலீசாக பணிபுரிகின்றனர்.
மாநகரில் விபத்து, பொது இடங்களில் இறக்கும் அனாதை உடல்கள், ரயிலில் அடிபட்டு இறப்போரின் உடல்கள், அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில், அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் வைக்கப்படுகின்றன.
இதுபோன்ற உடல்களை அடக்கம் செய்யும் சேவையை, சத்தியம்மாள் மேற்கொண்டுள்ளார். கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட, 10க்கும் மேற்பட்ட உடல்கள் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளார். அவரின் இந்த சேவைக்கு, போலீசார், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சத்தியம்மாள் கூறியதாவது:
நான் பணிக்கு சேர்ந்து ஒன்பது ஆண்டுகளாகிறது. ஏழு ஆண்டுகளாக இந்த சேவையில் ஈடுபட்டுள்ளேன். காக்கி உடைக்குள்ளும் கருணை, இரக்கம் உள்ளது.
அது மட்டுமின்றி இறந்த ஆத்மாக்களுக்கு செய்யும் உதவியாக இதை கருதுகிறேன். ஒரு பிணத்தை பரிசோதனை செய்ய ஊழியர்களுக்கு, 500 ரூபாய், குழி தோண்ட, 500 ரூபாய், உடலுக்கான புது துணி, பூஜை பொருள், மாலை செலவு என, ஒரு உடலுக்கு குறைந்தபட்சம், 2,000 ரூபாய் வரை செலவாகிறது.
ஒரு அனாதை உடலை அடக்கம் செய்யும்போது, ஆயிரம் கோவில்களுக்கு சென்ற நிம்மதி கிடைக்கிறது. என் கணவர், குடும்பத்தினர், சக காவலர்கள், அதிகாரிகள் ஊக்கப்படுத்தி உதவுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனாதை உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும், பெண் போலீஸ் சத்தியம்மாளுக்கு, வாழ்த்து சொல்ல விரும்புபவர்கள், 9498168272 என்ற அவரது மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.