திருப்பத்துார்:திருப்பத்துாரில், சாராய வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய எஸ்.எஸ்.ஐ., ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில், கர்நாடகா மாநில மது பாட்டில்களை, பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவுபடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்துார் டி.எம்.சி., காலனியில் கர்நாடகா மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த அரவிந்தன், 30, என்பவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர்.
அவரை கைது செய்யாமலிருக்க திருப்பத்துார் எஸ். எஸ்.ஐ., பன்னீர்செல்வம், 50, ஏட்டு சபீர், 51, ஆகியோர் 4,500 ரூபாய் கேட்டு மிரட்டினர். பேச்சு வார்த்தைக்கு பிறகு 3 ஆயிரம் ரூபாய் பெற்றனர். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பணம் பெற்றது உறுதியானது. இதையடுத்து இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., பாலகிருஷ்ணன் இன்று உத்தரவிட்டார்.