மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட அனுமந்தக்குப்பம் ஏரி உள்ளது. இந்த ஏரி, 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியில் பள்ளம் மதகு, மேட்டு மதகு என, இரண்டு மதகுகள் உள்ளன.
இந்த ஏரியை நம்பி, 250 ஏக்கர் பரப்பளவில், விவசாய பாசனம் நடைபெற்று வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், விவசாய விளை நிலங்களை, சென்னையில் உள்ள தனி நபருக்கு விற்பனை செய்தனர்.
பள்ளமாக உள்ள பகுதியில், ஏரியில் இருந்து மண் எடுத்து, மேட்டுப்பகுதியில் கொட்டி, வீட்டுமனை பிரிவுகளாக்கியும் விற்பனை செய்தனர்.
இதன் காரணமாக, ஏரியிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர்ப்பாசன கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, துார்ந்து போய் பாசன கால்வாய் அடையாளம் இல்லாமல் போனது.
இது குறித்து, பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், 130 ஏக்கர் நிலங்கள், தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மதுராந்தகம் ஏரி, 120 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மதுராந்தகம் ஏரியை சுற்றி, கரை அமைக்கப்பட்டு வருகிறது.
கரை அமைப்பதற்காக எடுக்கப்படும் மண்ணை, நீர்ப்பாசன கால்வாய் மீது போட்டு முற்றிலுமாக மூடி விட்டனர். இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
ஆகவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாசன கால்வாயை மீட்டு, சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கக்கோரி, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.