சென்னை, பிறந்து ஒருநாள் ஆன பச்சிளங்குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் குழந்தைகள் நல டாக்டர் ஹரிஷ்சந்திரா, பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் பினு நினன் ஆகியோர் கூறியதாவது:
மற்றொரு தனியார் மருத்துவமனையில் இருந்து, பிறந்து ஒருநாளே ஆன பச்சிளங்குழந்தை அழைத்து வரப்பட்டது. அக்குழந்தை களைப்பாகவும், மயக்க நிலையிலும் இருந்ததுடன், தாயிடமிருந்து தாய்ப்பால் அருந்துவதையும் முற்றிலும் தவிர்த்தது.
பச்சிளங்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மூளைத்தண்டை கனமாக அழுத்தும் பெரிய ரத்த உறைகட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், மூளைக்கு சீரான ரத்த ஓட்டம் தடைபட்டதும் தெரிய வந்தது.
சுவாசம், இதயத்துடிப்பு, உணர்வு நிலை செயல்பாடுகள் போன்றவற்றை மூளைத் தண்டு கட்டுப்படுத்துகிறது.
இதனால், குழந்தையின் மூளையில் இருந்த ரத்த உறைக்கட்டியை அகற்றுவதே தீர்வாக இருந்தது. அதன்படி, துல்லியமாக, விரைவாக என ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம்.
பின் தொடர் பராமரிப்பு மற்றும் சிகிச்சை முடிந்தது. சிகிச்சைக்கு பின் சில மாதங்கள் கடந்து, தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.