புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான்கள், செந்நாய் என, பல்வேறு உயிரினங்கள் வசிக்கின்றன.
வனப்பகுதிகளில், போதிய மழையில்லாததால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வனத்தில் உள்ள குளம், குட்டைகள் தண்ணீரின்றி வறண்டுள்ளன. தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், வன விலங்குகள் உணவு, குடிநீருக்காக இடம் பெயர்ந்து வருகின்றன.
காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே, 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. தற்போது, அவையும் வறண்டுள்ளன.
இதனால், யானை, மான் உள்ளிட்டவை தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
மேலும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் கால்நடைகளையும் அடித்து கொல்கின்றன.
ஏற்கனவே, அவற்றின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள, போர்வெல், சோலார் மின் மோட்டார் ஆகியவை முழுமையாக இயங்குவதை கண்காணிக்கவும், குடிநீர் தொட்டிகளில் நீர் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.