நாகர்கோவில்:ரயில் நிலைய கழிப்பறையில், பெண்ணின் பெயர் மற்றும் மொபைல் போன் எண்ணை எழுதிய பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்காக, பாதிக்கப்பட்ட பெண் ஐந்து ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தினார்.
திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மொபைல் போனில் ஏராளமான அழைப்புகள் வந்தன. அதில், பலரும் ஆபாசமாக பேசினர்.
முதலில் எதுவும் தெரியாமல் விழி பிதுங்கிய பெண், என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். மொபைல் போனில் அழைப்பு வந்தாலே அஞ்சி நடுங்கினார்.
இந்நிலையில், ஒருவர் அந்த பெண்ணிடம், எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலைய கழிப்பறையில் அந்த பெண்ணின் பெயரும், மொபைல் போன் எண்ணும் எழுதி இருப்பதாக கூறினார்.
அந்த நபரிடம் பேசி, அதை போட்டோ எடுத்து அனுப்ப சொன்னார். அந்தக் கையெழுத்தைப் பார்த்ததும், பழக்கப்பட்ட கையெழுத்து போல இருந்தது.
தன் கணவர் நிர்வாகியாக உள்ள குடியிருப்போர் சங்க 'மினிட்' புத்தகத்தில் இருந்த கையெழுத்துடன், கழிப்பறை எழுத்தை ஒப்பிட்ட போது ஒரு கையெழுத்து ஒத்து போனது.
பெங்களூரில் உள்ள தனியார் தடயவியல் ஆய்வகத்திற்கு அதை அனுப்பி, கழிப்பறை மற்றும் புத்தகத்தில் இருந்தவை ஒரே கையெழுத்து தான் என்பதை உறுதி செய்தார்.
இதை எழுதியது தொடர்பாக, தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் 'டிஜிட்டல்' பல்கலைக்கழக துணை பேராசிரியர் அஜித்குமார் என்பவர் மீது சைபர் கிரைம், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பினார்.
போலீசாரின் தடயவியல் சோதனையிலும் கையெழுத்து உறுதி செய்யப்பட்டது. பெண்ணின் கணவர் மீதுள்ள விரோதத்தால், அஜித்குமார் இவ்வாறு செய்தது தெரிய வந்தது.
கடந்த 2018ல் நடந்த இந்த சம்பவத்தில், தற்போது, பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.