கடலுார்: புதுச்சேரியில் இருந்து கடலுார் வழியாக சென்னைக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்திய நேபாள வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் டி.எஸ்.பி., கரிகால்பாரி சங்கர் தலைமையில், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு போலீசார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த, மீன் லோடு ஏற்றிச் செல்லும் மினி கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், மீன்கள் வைக்கப்படும் பெட்டியை வைத்து மறைத்து, அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக டிரைவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை, கிருஷ்ணா கார்டனைச் சேர்ந்த கத்திரி, 30; இவர் நேபாள நாட்டை சேர்ந்தவர். உடன் வந்தவர், லாரி உரிமையாளர் புதுச்சேரி, தவளக்குப்பத்தைச் சேர்ந்த பகலவன், 48; என தெரிய வந்தது.
இருவரும், புதுச்சேரியில் 280 பெட்டி மதுபாட்டில்களை வாங்கி, கடலுார், பண்ருட்டி வழியாக சென்னைக்கு கடத்திச் செல்வதை ஒப்புக் கொண்டனர்.
அதையடுத்து, போலீசார் லாரியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ.10 லட்சம்.