விக்கிரவாண்டி: குண்டலப்புலியூர் காப்பகத்தில் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளிடம், தேசிய மனித உரிமை ஆணையக்குழு உறுப்பினர்கள் ரகசிய விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரில் 'நல்ல சமேரியர் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில் அனுமதியின்றி காப்பகம் இயங்கி வந்தது. இந்த காப்பகத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில், காப்பக நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தை, 33 பெண்கள் உட்பட 143 பேர் மீட்கப்பட்டனர்.
அவர்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழு நேற்று காலை 10:20 மணிக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தது.
ஆணைய உறுப்பினர்கள் சுனில்குமார் மீனா, பட்டில் கேட்டன் பலிராம், ஏக்தா பக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ்குமார், பிஜூ ஆகிய 6 பேர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழுவினர் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்த 6 பெண்கள் உட்பட 20 பேரிடம் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்தினர்.
காப்பகத்தில் நடத்தப்பட்ட விதம், வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தனர்.
உணவு இடைவேளைக்கு பின் மாலை 3:30 மணிக்கு விசாரணை மீண்டும் தொடர்ந்தது. விசாரணையின் போது கலெக்டர் பழனி, மருத்துவக் கல்லுாரி டீன் கீதாஞ்சலி, தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், அரசு அதிகாரிகள், போலீசார் என யாரையும் அனுமதிக்கவில்லை.
ஜாமின் கோரி மனு
குண்டலபுலியூர் காப்பக முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட ஏழு பேர், ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில், 'மனநலம் பாதித்து, சாலைகளில் திரிவோரை போலீசார் உதவியுடன் மீட்டு சிகிச்சை அளிக்கிறோம். எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை' என, கூறியுள்ளனர்.