பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த வி. ஆண்டிக்குப்பம் பகுதியில், நள்ளிரவில் பள்ளம் தோண்டி பூஜை நடத்திய சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் சிவன்படை தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சம்மந்த மூர்த்தி, 47. இவர் மொரிஷீயஸ் நாட்டில் உள்ள சிவன் கோவிலில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், தந்தை பெருமாளுக்கு பூர்வீக சொத்தான 70 ஆண்டு பழமையான வீட்டை இடித்து அகற்றினார். பின்னர் அந்த இடத்தை நான்கு புறமும் துணிகளால் மறைத்து, 6 அடி அளவிற்கு பள்ளம் தோண்டி பலகை போட்டு மூடி வைத்திருந்தார்.
பள்ளம் தோண்டிய இடத்தில், நேற்று முன்தினம், பூஜை செய்யும் சத்தம் கேட்டதாகவும், நரபலி ஏதேனும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பள்ளத்தில் பூஜை செய்ததற்கான அறிகுறியாக மஞ்சள், சிவப்பு, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன.
சம்மந்த மூர்த்தி கூறுகையில் 'எனது தங்கை ருக்மணி மீது சுவாமி அருள் வந்து, வீட்டின் மனையில் 4 இடங்களில் சுவாமி சிலை உள்ளதாக கூறினார். அதன்பேரில் பள்ளம் தோண்டி தேடினோம். ஆனால் தோண்டத் தோண்ட சுவாமி சிலை கீழே சென்று விடுகிறது. அமாவாசை அன்று தோண்டினால் சிலை கிடைக்கும்' என்றார்.
'சிலை இருப்பதாகக் கூறி சம்மந்த மூர்த்தி மோசடியில் ஈடுபட முயற்சிக்கலாம்' என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து, வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர் அனுமதி பெற்று தான் தோண்ட வேண்டும் என கூறி, பள்ளத்தை மூடினர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.